தனக்கே இருக்க வேண்டும் என்ற ஆசை. மனிதன்தான் செத்துப் போகிறானே. தனக்கில்லாவிட்டால் தனது என்று தெரிந்த, தனது ரத்தத்தில் உதித்த குழந்தைகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறான். பெண்கள் தங்கள் இஷ்டப்படி இருந்தால் அது எப்படி முடியும்? அதற்குத்தான் கலியாணம் என்று ஒன்றை வைத்தான். பிறகு தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதற்குக் கற்பு என்பது பெருமை என்ற பொய் சொல்லி வேலி கட்டினான். பிறகும் பார்த்தான். காதல் என்ற தந்திரம் பண்ணினான். ஒருவருக்கொருவர் இந்த மாதிரி இஷ்டப்பட்டால் வாழ்க்கை பூராவாகவும் இஷ்டப்படுவார்களாம்.... இதெல்லாம் சுத்த ஹம்பக்...."
"எனக்கு ஒண்ணும் தெரியலியே!"
தமது உற்சாகமான பிரசங்கம் சுவரில்தான் பிரதிபலித்தது என்பதில் பிள்ளையவர்களுக்கு ஏமாற்றம். ராஜம் ஒன்றும் பேசாமல் குழந்தையை எடுத்துத் தனது மார்பில் இறுக அணைத்துக்கொண்டாள்.
"என்ன தெரியவில்லை? இது வெகு சுலபமாச்சே... சொல்லுகிறேன் கேள்..." என்று ஆரம்பித்தார்.
"எனக்குத் தெரிய வேண்டாம். வாருங்களேன் பீச்சுக்குப் போகலாம்" என்றாள். தன்னையறியாமல் அவள் கைகள் குழந்தையை இறுக அணைத்துக்கொண்டன.
ராமசாமி பிள்ளைக்கு இதைக் கவனிக்க நேரமில்லை. தமது சுகாதாரத்திற்கு, தமது குடும்ப சுகாதாரத்திற்கு அவசியமான கடற்காற்று வாங்க அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டார்.
"என்ன ராஜம், புறப்படலியா?" என்பதற்கு முன் "இதோ வந்தேன்" என்று குழந்தைக்கு ஒரு மாற்றுச் சட்டையணிந்து, அதை இடையில் எடுத்துக்கொண்டு தயாரானாள்.
குழந்தை, "அப்பா!" என்று அவரை நோக்கித் தாவியது.
புன்சிரிப்புடன் குழந்தையை எடுத்துக்கொண்டார். அப்பொழுது இருவர் கரங்களும் சந்தித்தன. ராஜத்திற்கு உள்ளத்தில் குதூஹலம் கலந்த ஒரு ஏமாற்றம் தோன்றியது.
2
கடற்கரையில் இருவரும் உட்கார்ந்திருந்தனர். குழந்தை மீனுவிற்கு மணலை வாரியிறைக்கும் தொழிலில் வெகு உற்சாகம். தலை எல்லாம் மணல், ராஜத்தின் மடி எல்லாம் மணல்.
குழந்தையுடன் விளையாடுவதில் ராஜத்திற்கு எல்லாம் மறந்து விட்டது. மீனுவின் அட்டகாசத்தில் தன்னை மறந்துவிட்டாள்.
கடலை பட்டாணி விற்பவன் ஒருவன் அவர்களை நெருங்கினான்.
"அம்மா! கடலை பட்டாணி" என்றான்.
194
இரண்டு உலகங்கள்