உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குப்பனின் கனவு


ன்றைக்கு நாள் முழுவதும் மழை சிணுசிணுத்துக் கொண்டிருந்தது. ஒரேயடியாக இரண்டு மணி நேரமோ, மூன்று மணிநேரமோ அடித்து வெறித்தாலும் கவலையற்று வேலை பார்க்கலாம். இப்படி நாள் முழுவதும் அழுதுகொண்டிருந்தால்...?

குப்பன் ஒரு ரிக்ஷாக்காரன்.

வண்டியை மேற்கும் கிழக்குமாக இழுத்துச் சென்றதுதான் மிச்சம். ஒரு சத்தமாவது கிடைக்கவில்லை.

மேலெல்லாம் நனைந்துவிட்டது. தலையில் போட்டிருந்த ஓட்டைத் தொப்பி - அது எந்த வெள்ளைக்காரன் போட்டதோ - அதுவும் தொப்பலாக நனைந்துவிட்டது. தொப்பியிலும் உள்பக்கம் ஈரம் சுவரியது என்றால், வேஷ்டியைக் கூட பிழிந்துகட்ட நேரமில்லை. அவ்வளவு ஆவல்.

ஒரு நாலணா கிடைத்தால் வீட்டிலே எறிந்துவிட்டாவது முடங்கலாம். போகிற பெரிய மனிதர்களுக்கு ரிக்ஷா என்றால் மழையில் கசந்து கிடக்கிறது. அந்தத் தெருமூலையில் நிற்கிற பிச்சைக்காரன் பாடு குஷிதான். பிச்சைக்காரனாக இருந்தால் கூட... சீ... என்ன மானங்கெட்ட பிழைப்பு!

குப்பன் பொருளாதார சாஸ்திரியல்ல; பொதுவுடைமைக்காரனல்ல. இத்தனை நாளும் அவன் பல்லை இளித்துக்கொண்டு "ஸார்", "ஸார்" என்ற, சட்டைபோட்ட பேர்வழிகளைக் கண்டால் அவனுக்கு எரிச்சலாக இருந்தது. திருட்டுப் பசங்கள்...! ஒரு பயலாவது ஏறக்கூடாதா?

"ஸார்" என்று ஒருவரிடம் வண்டியைத் திருப்புகிறான்.

அவர் "வேண்டாமப்பா" என்று கொண்டே டிராமில் ஏறிக்கொண்டு விடுகிறார்.

அந்த மனிதனைக் கிழித்துவிடலாமா என்ற கோபம்.

வண்டியை ஸென்ட்ரல் பக்கம் இழுத்துக் கொண்டு செல்லுகிறான். மனதிலே என்ன என்னவோ ஓடுகிறது. இப்பொழுது ஒரு மொந்தை

புதுமைப்பித்தன் கதைகள்

201