உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"கேஸ்தான் முடிந்துவிட்டதே இவன் தான் குற்றவாளி என்று நீர் திட்டமாக நினைக்கிறீரா?" என்றார்.

ஜூனியர் ஆச்சரியப்பட்டு விழித்தார்.

"கேள்வி அதிசயமாக இருக்கலாம். உமக்குச் சந்தேகம் இருக்கிறதா?"

"சந்தேகம் இல்லை."

தனது மகன் கொடுத்த கடிதத்தைக் கொடுத்தார்.

"இதை வாசியும். இதற்காகத்தான் மத்தியானம் சென்றிருந்தேன்."

அவர் வாசித்து முடிக்கும்வரை காத்திருந்தார்.

"அப்புறம்?" என்றார் ஜூனியர் ஆச்சரியத்துடன்.

"எனது மகனைச் சில கேள்விகள் கேட்டேன். செத்தவன் போட்டிருந்த மோதிரத்தைப் பற்றிக் கூறினான்."

ஜூனியருக்கு இன்னும் ஆச்சரியம் அதிகரித்தது.

"அவன் அதை எடுத்துவிட்டானாம். அது அவன் மீது இருக்க அவனுக்குப் பிடிக்கவில்லையாம்."

"அப்படியா?"

"அவன் தான் அதை புஸ்தகத்தின் பின்புறம் ஒளித்தானாம்."

"ஆமாம் ஸார். கேஸில் மோதிரத்தைப் பற்றியே பேச்சில்லையே!"

"ஆமாம். அது தான் செத்தவன் மோதிரம் வைத்திருந்ததே கிடையாது. அதைப் பற்றி என் மகனுக்கு எப்படித் தெரியும்? அவன் அங்கிருந்தால்தானே!" என்றார்.

ஊழியன், 4.1.1935

248

குற்றவாளி யார்?