ஆலோசிக்க, இதுவரை எழுதிய முறையைத் தள்ளிவிட வேண்டியதுதான் என்று திட்டமாகப்படும். இச்சமயத்தில்தான் மூளைக்குக் களைப்பு ஏற்பட்டு ஒருதடவை வெற்றிலை - வெற்றிலை என்றால் என் அகராதியில் வெற்றிலை + புகையிலை என்று அர்த்தம் - போட வேண்டி வந்துவிடும். வெற்றிலை போடும்பொழுது நிம்மதியாக ஆலோசிப்பது நல்லது என்று தோன்றும். உடனே ஜன்னலின் பக்கத்தில் சென்று உட்கார்ந்துகொண்டு வெளியே பார்ப்பேன். அப்பொழுது மிஸ்டர் 'பூசனிக்காய்' அம்பி தென்படுவான். 'ஸார்' என்பான். 'என்னடா பூசனிக்காய்' என்பேன். இதற்கு மேல் எங்கள் சம்பாஷணை வளர்ந்ததில்லை. ஆனால் இருவர் உள்ளத்திலும் இருக்கும் 'நாடோ டி'த் தன்மை இருவரையும் பிணித்தது. இவ்விதமான ஆத்மீகப் பிணிப்பு 'பூசணிக்காய்கள்' சர்க்கஸ் வேலைகளுக்கிடையே நடந்தேறும். இதற்குள் நேரமாகிவிடுமாகையால் வேறு ஒரு பக்கத்தில் இருக்கும் 'காலி' ஸ்தானத்தை நோக்கிச் சென்றுவிடுவேன்.
இப்படி இருக்கையில் எனது நண்பர் ஒருவர் ஒரு குலைச் செவ்வாழைப் பழங்களை எனக்கு அனுப்பியிருந்தார். பழங்கள் கொஞ்சம் காய்வாட்டாக இருந்தன. நான் ஆபீஸிற்குப் போகும்முன் அதை ஜன்னலின் பக்கம் தொங்கவிட்டுச் சென்றேன். பழமும் பழுக்கவாரம்பித்தது. அறை முழுவதும் அதன் வாசனை பரிமளித்தது.
மறுநாள் சாயுங்காலம் ஆபீஸில் இருந்து திரும்பி வரும்பொழுது ஒரு சிறுவன் செவ்வாழைப்பழம் ஒன்று தின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். கொஞ்ச தூரம் சென்றதும் இன்னும் ஒரு சிறு பையனும் ஒரு செவ்வாழைப் பழம் தின்று கொண்டிருந்தான். இதிலிருந்து என்ன நடந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு துப்பறியும் கோவிந்தனும் வேண்டாம். வாசகர்களே இதற்குள் அந்த மகத்தான தொழிலைச் செய்து முடித்திருப்பார்கள். எனது அறைக்குச் சென்று பார்த்தேன். பழக்குலை மாயமாக மறைந்துவிட்டது என்று கண்டுகொண்டேன். 'பூசனிக்காய்' வேலைதான். அவனைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் என் மனம் கொதித்தது. அவனைப் பார்த்தவுடன் துப்பறியும் நாவலில் கடைசி அத்தியாயத்தில் நடக்கிறபடி 'அடே, பூசனிக்காய், வாழைப்பழக்குலைத் திருட்டிற்காக உன்னைக் கைது செய்கிறேன்' என்று அவன் தோள்மீது கையை வைத்துச் சொல்ல வேண்டும் என்று ஆசையாகிவிட்டது.
கொலைகாரனும் திருடனும் தாம் குற்றம் செய்த இடத்தைப் பார்க்க வருவது இயற்கையாம். அதுதான் 'பூசனிக்காயை' என் சன்னலின் பக்கம் வரும்படித் தூண்டியிருக்க வேண்டும்.
அவன் ஜன்னல் முன்பாக இரண்டு மூன்று தரம் நடந்தான். நான் கவனிக்காததுபோல் இருந்தேன்.
பிறகு பக்கத்திலிருக்கும் குட்டிச்சுவரில் ஏறிக்கொண்டு, "இங்கே சர்கேசு வந்திருக்குதே, அதிலே ஒருத்தன் ஆறு குருதெயிலே சவாரி பண்ணுரான்" என்றான்.
புதுமைப்பித்தன் கதைகள்
263