தள்ளாடுகின்றன. தலையிலிருந்த சும்மாட்டுத் தலைப்பாகை கழன்று மாலையாக விழுந்துவிடுகிறது. வேர்வையில் நனைந்த அங்கவஸ்திர விளிம்புகள் கழுத்திற்குச் சுகமாக இருக்கின்றன. தலைக்கு என்ன நிம்மதி! இரும்பு வளையத்திலிருந்து விடுபட்டது போல் மேல் மூச்சு வாங்குகிறது.
கட்டாயம் யாராவது, 'அங்கே யாரது' என்று கேட்பான். கூப்பிட்டுப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வரச்சொல்லிவிடலாம் என்ற நம்பிக்கை.
வாய்க்காலைக் கடக்கும் வரை ஒருவரும் கூப்பிடவில்லை. கருப்பனையும் காணோம்; ஒருவனையும் காணோம். கை பச்சைப் புண்ணாக வலிக்கிறதே. இந்தப் பயல்கள் இன்றைக்கு என்று எங்கு தொலைந்திருப்பார்கள். திருட்டுப் பசங்கள்! சனியன்கள்.
வாய்க்காலையும் கடந்தாய்விட்டது. அப்பாடா பெட்டியைக் கீழே வைக்க வேண்டியதுதான். கை என்ன இரும்பா? சீச்சீ! இன்னும் கொஞ்ச தூரந்தானே. பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு நடக்கிறான். ஒவ்வொரு அடியும் எத்தனையோ மைல்கள்! அந்த மூலையிலேதான் பாட்டியின் வீடு! எல்லாம் என்ன ஊரே அடங்கிக் கிடக்கிறது. அதுவும் ஒரு நல்ல காலந்தான். இல்லாவிட்டால் பெட்டி தூக்கிய அவமானம் தெரிந்து போகாதா.
அப்பாடா! வந்தாச்சு பாட்டியின் வீடு! உள்ளே சென்று திண்ணையில் பெட்டியை வைத்துவிட்டு கதவைத் தட்டுகிறான்.
உள்ளே இருந்து "அதாரது?" என்ற குரல்.
"பாட்டி! நான் தான் சாமா!" என்கிறான். கதவு திறக்கப்படுகிறது. அங்கு பாட்டி நிற்கவில்லை. ஓர் இளம் பெண் மங்கிய குத்துவிளக்கின் வெளிச்சத்தில் சிரித்துக்கொண்டு நிற்கிறாள்.
சாமாவின் உடல் குன்றிவிடுகிறது. பெட்டியைத் தூக்கிச் சுமந்து கொண்டு அவள் முன்பு கூலிக்காரன் மாதிரி எப்படிப் போவது. அவள்தான் பங்கஜம். அவன் அத்தையின் மகள்.
"பாட்டி! சாமா வந்திருக்கான்!" என்று உள்ளே பார்த்துக்கொண்டு சொன்னாள்.
"என்னடி சாமாங்கரே? மொளச்சு முணெலைகுத்தலை, சாமா! நன்னாருக்கு! வாடாப்பா! ஏன் அங்கேயே நிக்கரே" என்றாள்.
பாட்டியின் வீட்டிற்குள் செல்லும்போது வெட்கமாக இருந்தாலும் உள்ளத்திலே ஒரு காரணமற்ற சந்தோஷம் இருந்தது.
"என்னடா 'உம்' இன்னு இருக்கரே. அங்கே கொழந்தைகள் எல்லாம் எப்படி இருக்கு? பரீட்சை எப்படிக் குடுத்தே? அடியே! அந்த மண் எண்ணை வெளக்கை ஏத்துடீ, தொரைகளுக்கு இது புடிக்காது!" என்றாள்.
புதுமைப்பித்தன் கதைகள்
267