உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கணக்கு முதலியார், கி.மு. சங்கரலிங்கம் பிள்ளை, பலசரக்குக் கடை ஓட்டப்பிடாரம் பிள்ளை - ஓட்டப்பிடாரம் என்ற ஊர் அவரது பூர்விகம் - வாத்தியார் சுப்புப் பிள்ளை, பிள்ளையார் கோவில் பூசாரி வேணுவலிங்கப் பண்டாரம் - இவர்கள் எல்லோரும் வசிக்கும் குடிசைகள். குடிசைகளைப் பார்த்தாலே, அவர்கள் பண்ணைப் பிள்ளையைப் போல் வாழ்க்கையின் சௌகரியங்களைப் பெற்றவர்கள் அல்லர் என்று தெரிந்துவிடும். எல்லாரும் பண்ணைப் பிள்ளையவர்களின் வயல்களை, வாரமாகவோ குத்தகையாகவோ எடுத்துப் பயிர் செய்து ஜீவிப்பவர்கள். வேளாளர் எல்லாரும் ஒன்றுக்குள் ஒன்றுதான். கமறும் தேங்காயெண்ணெய் வாசனை பரிமளிக்கும் இந்தத் தெருவைத் தாண்டினால் ஊர்ப் பொட்டல். அதில் தனிக்காட்டு ராஜாவாக, தேஜோமயானந்தமாக, ஊர்க்காவல் தெய்வமாகிய சுடலைமாடப் பெருமானின் பீடம் நெடுமரம் போல் காறைக் கட்டியினால் உறுதியாகக் கட்டப்பட்டு நிற்கும். இடிந்து விழுந்த கோவிலில் மூர்த்தீகரமாக எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணுவை விட இவருக்கு ஊர் மக்களிடையில் அதிக மதிப்பு உண்டு. அது அந்தச் சுடலைமாடனுக்குத் தெரியுமோ என்னவோ! அதைச் சுற்றி ஐந்தாறு மறவர் குடிசைகள், இவற்றில் ஊர்த் தலையாரி முதலியோர் வசிப்பார்கள். குடிசைகளைத் தாண்டிச் சென்றால் மானாவாரிக் குளம் - அதாவது தண்ணீருக்கு வானம் பார்க்கும் ஏரி. அதன் இக்கரையின் வலப்புறத்தில் பறைச்சேரி; அங்கு ஒரு முப்பது குடிசைகள்.

வேளாளர் தெருவில், ஊர்ப் பொட்டலை அணுகினாற் போல் பண்ணைப் பிள்ளையவர்கள் கட்டிய சவுக்கை, ஓலைக்கூரை வேய்ந்த திண்ணை, ஒட்டப்பிடாரம் பிள்ளையின் பலசரக்குக் கடைக்கு எதிர்த்தாற் போல் இருக்கும். ஊர்ப்பேச்சு, ஊர்வம்பு, கி.மு.வின் அரசாங்க நிர்வாகம், சீட்டாட்டம் எல்லாம் அங்குதான். சவுக்கையில் வேனிற்காலங்களில் இரவில் ஆட்கள் படுப்பதற்கும், பகலில் 'பெரிய மனிதர்' சாய்ந்திருந்து போவதற்கும் கோரைப் பாய், அழுக்குத் தலையணை, திண்டு முதலியவை மூலைக்கு ஒன்றாகக் கிடக்கும். ஓட்டப்பிடாரம் பிள்ளையின் கடையில் ரூலர் சிகரெட் முதல் பின்னை எண்ணெய் வரை வாங்கிக் கொள்ளலாம். மகா சிவராத்திரி, சுடலைமாடனுக்குக் கொடை முதலிய காலங்களில் அவர் சீட்டுக்கட்டுகளும் விற்பார். ஓட்டப்பிடாரம் பிள்ளை பலசரக்குகளில் மட்டும் வியாபாரம் செய்பவர் அல்லர். குழிப்பெருக்கம், அரிவரி முதலிய ஆரம்பக் கல்வி விஷயங்களிலும் பண்டமாற்று வியாபாரம் நடத்துபவர். உற்சாகம் வந்துவிட்டால் கடை முன்பு கூடியிருக்கும் தேவமார்களுக்கு 'மருதை வீரன்' கதை, அல்லியரசாணி மாலை முதலியவற்றை வாசித்துக் காலட்சேபம் செய்வார். சவுக்கையில் சுவாரஸ்யமான பேச்சுக்கள் அடிபட்டால் அவர் கடையிலிருந்து கொண்டே கூட்டத்தில் தம்முடைய பங்கையும் சேர்த்துவிடுவார்.

கோடைக்காலம் ஆரம்பமாகி அறுப்பும் தொடங்கிவிட்டது. அறுப்புத் தொடங்கிவிட்டது என்றால் ஓட்டப்பிடாரம் பிள்ளைக்கும்

286

துன்பக்கேணி