"ஏட்டி, ஒம் புருசன் என்னமோ பணங் குடுக்கணும் என்று சொல்லுதாகளே, அதுக்குப் பண்ணையாரு கோவிச்சாகளாக்கும்; இருந்தாலும் ஊரு பெரியவுகளை பகைச்சுக் கிடலாமாட்டி!" என்று மருதியிடம் பேச்சுக் கொடுத்தார் கடைக்காரர்.
"என்ன சாமி, எம் பள்ளன் பண்ணை யெசெமாங்கிட்டெ என்னமோ ஒரு ரெண்டு நூறு வாங்கிருக்காஞ் சாமி. ஊருக்குப் பெரிய நாயம்மாரே இப்படிப் படுத்துனா, நாங்க என்ன செய்வோஞ் சாமி? அதுலெ ரெண்டு காளையும் வண்டியும் வாங்கினா, இப்பொ அதுவும் - அந்தச் சொடலைதான் பாக்கணும்! - இவிய இப்படி உறுக்கினா, பணத்துக்கு எங்கே போக? சாமி, இம்பிட்டு கருப்பட்டிப் போயிலையும் சருகும் குடுங்க சாமி, தொளுவெப் பாத்துக்கிட்டு வாரேன்!" என்று அவளுக்குத் தெரிந்ததைப் புலம்பிக்கொண்டு மாட்டுத் தொழுவத்தின் பக்கம் சென்றாள் மருதி.
2
மருதியின் புருஷன் பண்ணைப் பிள்ளையிடம் கடன் வாங்கும்பொழுது, 'நிச்சயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவோம்' என்ற நம்பிக்கையிருந்துதான் வாங்கினான் என்று நினைக்க முடியாது. கொஞ்ச நாட்கள் மாட்டை உபயோகித்துக்கொண்டு, அது நோஞ்சானாகும் சமயத்தில் பண்ணை எஜமானின் காலைப் பிடித்துப் பணமாகக் கடனைக் கொடுக்காமலிருந்து விடலாம் என்ற யோசனையின் பேரில்தான் நடத்தியிருக்கவேண்டும். பண்ணை எஜமான் இவனுடைய கூழைக் கும்பிடுகளுக்கெல்லாம் மசிகிற பேர்வழியாகக் காணப்படவில்லை. மேலும் அவர்தான் என்ன செய்வார்? எங்கு பார்த்தாலும் பணமுடை; தீர்வைக்குக் கூடக் கட்டி வராது போலிருக்கிறது. நிலத்தில் ஜெண்டாவை நட்டுவிடாமலிருக்க, மசிகிற பேர்வழிகளிடத்தில் சிறிது (அரசாங்கத்தின் பயத்தினால் ஏற்பட்ட) முரட்டுத் தனத்தோடு நடந்துகொண்டார். காளைகள் அவர் வசமாயின. அவ்வளவுதான் மிச்சம். ஊர்ப் பறைச்சேரியில் ஏக களேபரம். வெள்ளையனும் அவன் பெண்டாட்டியும் குய்யோமுறையோவென்று கத்தினார்கள். வெள்ளையன் கொஞ்சம் முரண்டினான்; உதை கிடைத்தது.
பண்ணையார், 'பறச் சனமோ குறச் சனமோ!' என்று வெறுத்துக் கொண்டார். என்ன செய்தாலும் நன்றியில்லை என்ற மனக் கசப்பு.
வெள்ளையன் அன்று இரவு வெகு நேரம்வரை வீட்டிற்கு வரவில்லை.
மறுநாள் விடியற்காலமாகப் பண்ணைப் பிள்ளையவர்கள் வெளியில் செல்லுமுன் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று பார்த்து விட்டுப் போகலாமே என்று உள்ளே நுழைந்தார். வெள்ளையனின் நோஞ்சான் காளைகள்தான் அசைபோட்டுக் கொண்டு ஆள் அரவத்தைக் கேட்டு எழுந்திருந்தான். மயிலைக் காளைகள் இரண்டையும்
288
துன்பக்கேணி