உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு விஷயங்கள் சந்தேகமில்லாமல் தெரியும். ஒன்று, இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் பிரம்மசாரியாக இருப்பது என்பதன் அர்த்தம்; இரண்டாவது, தேயிலை உற்பத்தியில் கறுப்பு மனிதர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது. இதற்கு மேலாகக் கறுப்புக் கூலிகளின் பாஷையும் நன்றாகத் தெரியும்.

கறுப்பு மனிதர்கள் 'வாட்டர் பால்ஸ்' என்ற இடத்தை 'வாட்டர் பாலம்' என்று கூறுவார்கள். இலங்கைக் குன்றுகளின் சரிவில் ஒரு நீர்வீழ்ச்சியின் பக்கத்தில் இருப்பதால் அதற்கு அந்தப் பெயர் வந்தது. அந்த மலைச்சரிவில், இரண்டு மைல் நீளமும் மூன்று மைல் அகலமுமுள்ள தேயிலைக் காடு நீர்வீழ்ச்சியின் இருபக்கத்திலும் உள்ளது. துரையவர்களின் பங்களா, நீர் வீழ்ச்சிக்கு மேலே ஒரு பாதையின் மீது கட்டப்பட்டிருக்கிறது. அதற்கு எதிரே, அந்தப் பெயரற்ற காட்டாற்றின் மறுபக்கத்தில், கூலிகளின் காறைக் குடிசைகள் - கோழிக்கூடுகள் மாதிரி. அதற்கும் தள்ளி ஒரு ஆஸ்பத்திரி, மற்ற கறுப்பு அதிகாரிகள் இருக்கும் இடங்கள். அதிகாரிகளோ, தோலைத் தவிர மற்ற எல்லா அம்சத்திலும் துரைகளின் மனப்போக்கையுடையவர்கள். அங்கு போய்க் குடியிருந்தால் இரண்டு விதமான மனப்பான்மைதான் ஏற்படும். ஒன்று அங்கிருக்கும் கறுப்புத் துரைகளுடையது. இரண்டாவது சிறைக்குத் தயாராக்குவது, மூன்றாவதும் ஒன்றிருக்கிறது. அதுதான் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி போடுவது.

தட்டப்பாரையில் தங்கி, பிறகு கப்பலேறி மலைக்கு வருமட்டும் மருதிக்கும் அவள் தாயாருக்கும் என்னவோ பெரிய புதையல் எடுக்கப் போவதாக உற்சாகம். 'வாட்டர் பால'த்திற்கு வந்தவுடன் அதன் சீதளமான பருவமும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த காறைக் குடிசையும் கவர்ச்சித்தன. தேயிலை பறிக்கும்பொழுது குடையாகத் தலையில் போட்டுக் கொள்ளவும் கம்பளி. வாரத்திற்கு வாரம் கைமேல் காசு! எல்லாம் வெகு சௌகரியமாக இருந்தன. அங்கிருக்கும் நாற்றம் வாசவன்பட்டிச் சேரியின் நாற்றத்தைவிடச் சிறிது அதிகம். அதுவும் சில நாட்களில் பழகிப் போய்விட்டது. குளிரின் கடுமையால் காலை 7 மணிக்குத்தான் எழுந்திருக்க முடியும். பிறகு கஞ்சியைக் காய்ச்சிக் குடித்துவிட்டு, முதுகில் ஒரு கூடையைப் போட்டுக் கொண்டு தேயிலைக் கொழுந்து பறிக்கச் செல்லுவார்கள். முதலில் பக்கத்திலிருந்தவர்களிடம் கேட்டுப் பழகிக்கொண்டார்கள். ஆரம்பத்தில் இரண்டு மூன்று வாரத்திற்குக் குஷாலாகத்தான் இருந்தது. ஆனால், கூட வேலை செய்யும் பெண் கூலிகளின் பேச்சும் நடத்தையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

மூன்றாவது வாரத்தில் தாய்க் கிழவிக்கு மலைக் காய்ச்சல் வந்தது. ஆஸ்பத்திரிக்குச் சென்று மருந்துத் தண்ணி வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் துணையாக மருதியும் போய்விட்டு வருவாள்.


புதுமைப்பித்தன் கதைகள்

291