உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தையுடன் கொஞ்சுவதுபோல் சிரித்துப் பேசிக் கொள்வாள். கலியாணமான ஜோரில் இருந்த முகக்களை அப்பொழுதுதான் தோன்றும்.

மறுபடியும் புத்தி தெளிந்தால், மங்கிய கண்கள் - இடிந்த மனத்தின் செயலற்ற ஏக்கம் - அவள் முகத்தில் கவிந்திருக்கும்.

பேச்சிக்கு ஒரு யோசனை தோன்றியது. 'ஊருக்கு எழுத்துப் போடணும்' என்று சுப்பனிடம் சொன்னாள். வெள்ளையனுக்கு, 'இதைத் தந்தியாகப் பாவித்து வரவேண்டும்!' என்று ஒரு கார்டு எழுதப்பட்டது.

அதுபோன நான்கு தினங்களுக்குள், புதிதாக வந்த துரைக்குக் கூலிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அதிலும் வியாதியஸ்தராக இருப்பவர்களுக்குச் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும் என்பது அவரது நோக்கம்.

மருதியுடைய பெயரும் அந்த ஜாபிதாவில் சேர்ந்தது.

இந்தச் சமாசாரம் மருதிக்கு எட்டியதும், அவளுக்குத் தெளிவு ஏற்பட்டது. வாசவன்பட்டிக்குப் போய்விடலாம் என்ற நம்பிக்கையிலோ என்னவோ, சிறிது நடமாடவும் முடிந்தது. ஆனால் பலவீனம் மாறவில்லை.

புதன்கிழமைக் கப்பலுக்கு அனுமதிச் சீட்டு, சம்பளம் - எல்லாம் வந்து சேர்ந்தன.

7

வெள்ளிக்கிழமை மத்தியானம் வெய்யிலின் ஆதிக்கம் ஹிட்லரை நல்லவனாக்கியது. மருதி குளக்கரை வழியாகச் சேரியை நோக்கி நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தாள். அவள் இருந்த நிலையில் யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. கையில் ஒரு கம்பு. தலையிலும் இடுப்பிலும் இரண்டு மூட்டைகள். இடையில் வைத்திருந்த மூட்டையில் நாலைந்து கதலிப் பழம், இரண்டு ஜோடி வளையல்கள் - எல்லாம் வெள்ளைச்சிக்கு.

சேரியில் பறையும் தம்பட்டமும் அடிப்பது அவள் காதில் ஒலித்து நடைக்கு வேகமூட்டியது. மூலை திரும்பினால் ஊர்ப் பொட்டல், அதற்கப்புறம் அந்த மூலையில் வெள்ளையன் குடிசை, சுடலை மாடன் பீடத்தை அணுகியாய்விட்டது.

அப்பொழுது மேளதாள முழக்கங்களுடன் அந்த மத்தியானப் பனிரெண்டு மணி வெய்யிலில் ஓர் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. முன் பக்கம் சிலம்பம் ஆட்டத்துடன் பறை! அதற்குப்புறம் ஒற்றைக் குதிரை சாரட்டில் மாப்பிள்ளையும் பெண்ணுமாக ஓர் ஊர்வலம்!

நெருங்கிப் பார்க்கிறாள் மருதி. கண் கூசுகிறது. கொண்டையில் பூவும், நெஞ்சில் சந்தனமும், ஜரிகைக் குல்லாவும் வைத்து உட்கார்ந்திருப்பவன் - வெள்ளையன்தான்! என்ன ஜோராக உட்கார்ந்திருக்-

298

துன்பக் கேணி