அந்த இருளுக்கே ஒரு பிரகாசம் உண்டு போலும்!
அவள் தான் தேவி!
பிறந்த கோலத்திலே வாலைக் கனிவு குன்றாத கன்னி உருவம்!
உயர இருந்தாலும், குழந்தைக்கு ஒவ்வொரு அங்கமும் நன்றாகத் தெரிந்தது.
அசைவற்று நிற்கும் உருவத்தின் முகத்தில் ஒரு புன்னகை! கொடூரமான, உயிரைக் கொல்லக்கூடிய - ஆனால், உடலில் உணர்ச்சி வேட்கையைப் பெருக்கக் கூடிய புன்னகை!
குழந்தை அவளையே நோக்கிக் கொண்டிருந்தது. வைத்த கண் எடுக்காமல் நோக்கிக் கொண்டிருந்தது.
மெதுவாகக் 'கருப்பாயி' என்ற வார்த்தை அதன் வாயிலிருந்து வெளிப்பட்டது.
சப்த உலகங்களும் மோதுவனபோல் ஒரு பேரிடி. உருவம் இரு கூறாகப் பிளந்து மறைந்தது. பாறைச் சுவர்கள் கவிழ்ந்து விழுந்தன. ஆயிரம் மின்னல்கள் குழந்தையின் நெஞ்சில் பாய்ந்தன.
ஒரே இருட்டு.
❍❍
தலைமைக்காரத் தேவரின் குழந்தை கருகிக் கரிக்கட்டையாகச் சுனையில் மிதப்பதை மாட்டுக்காரப் பையன்கள் கண்டு, ஊராருக்குத் தெரிவித்தார்கள்.
மணிக்கொடி, 14.4.1935
324
ஞானக் குகை