உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை!


ம்பாசமுத்திரத்திற்கும் பாபநாசத்திற்கும் இடையிலுள்ள ரஸ்தா எப்பொழுதும் ஜனநடமாட்டத்திற்குப் பெயர் போனதல்ல. ஆனால், சொறி முத்தையன் கோவில் விழாவன்று வேண்டுமானால் வட்டியும் முதலுமாக ஜனங்கள் அந்த வழியில் நடந்து தீர்த்துவிடுவார்கள். சில சமயம் பாபநாசம் நெசவாலை மோட்டார் லாரி காதைப் பிய்க்கும்படியாகப் புழுதியை வாரி இறைத்துக் கொண்டு கோலாகலமான ஓட்டை இரும்புக் கோஷத்துடன் செல்லும். மலை விறகு வண்டிகள் லொடக்லொடக் என்று, அல்லது சக்கரத்தின் பக்கத்தில் வண்டி சரிவில் வேகமாக உருண்டுவிடாதபடி கட்டும் கட்டையை வண்டிக்காரன் அவிழ்க்க மறந்துவிட்டிருந்தால், 'கிரீச்' என்ற நாதத்துடன், தூங்கி வழிந்துகொண்டு சாரை சாரையாகச் செல்லும். வண்டிக்காரர்களும் வண்டி மாடுகளும் சமதளத்தில் இறங்கிவிட்டால் எதிரிலோ பின்னோ என்ன வருகிறது என்று கவனியாது, தூங்கி வழிந்து கொண்டு செல்ல இச்சாலையில் பூரண உரிமையுண்டு. சாலையில் இரண்டு பக்கங்களில் இருக்கும் மரங்களின் சம்பிரமத்திற்குக் கேட்கவேண்டியதில்லை. எதிரே காணப்படும் மலைகளைக் கூடப் பார்க்க முடியாத குறுகிய பார்வையுடையவனானால், அடிமை நாட்டினர் மாதிரி பவ்வியமாக அடங்கி ஒடுங்கி வளர்ந்திருக்கும் மரங்களைப் பார்த்தால் போகும்வழி ஒரு நாளும் மலைப்பிரதேசத்தையடையாது என்று எந்தக் கோவிலிலும் சத்தியம் செய்யத் தயாராக இருப்பான். விக்கிரமசிங்கபுரம் தாண்டிய பிறகுதான், நாணிக் குழைந்து வளர்ந்த இந்த மரங்கள் தங்கள் குலப் பெருமைகளைக் காட்ட ஆரம்பிக்கின்றன.

அன்று அவ்வளவு மோசமான வெய்யில் இல்லை. மலைச்சிகரத்தின் இரு பக்கங்களிலும் கவிந்திருந்த கறுப்பு மேகங்களில் மறைந்து, அதற்குச் சிவப்பும், பொன்னுமான ஜரிகைக் கரையிட்ட சூரியன், கீழ்த்திசையில் மிதக்கும் பஞ்சுமேகங்களில் தனது பல வர்ணக் கனவுகளைக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டான். பொதியை, பெரிய ரிஷிக் கிழவர் மாதிரி கரு நீலமும் வெண்மையும் கலந்து கறையேற்றிய மஞ்சுத் தாடிகளை அடிக்கடி ரூபம் மாற்றிக்கொண்டு,

புதுமைப்பித்தன் கதைகள்

331