உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பொழுது, அவன் வந்த திக்கிலிருந்து 'ஜல்! ஜல்!' என்று சலங்கைகள் ஒலிக்க, தடதடவென்று ஓர் இரட்டை மாட்டுவண்டி வந்து கொண்டிருந்தது. வண்டிக்காரன் மாடுகளை 'தை! தை!' என்று விரட்டி, 'தங்கம் தில்லாலே' என்று பாடிக்கொண்டு வாலை முறுக்கினான். வண்டி காலி. இல்லாவிட்டால் பாடிக்கொண்டு போக அவனுக்கு அவ்வளவு தைரியமா?

"ஓய், வண்டிக்காரரே! எவ்வளவு தூரம்? நானும் ஏறிக்கொள்ளட்டுமா?" என்றான் சாலையில் உட்கார்ந்திருந்த நாடோடி.

"வண்டியா! பாவநாசத்திற்கு, வேணுமானா பெறத்தாலே ஏறிக்கிரும்!" என்றான் வண்டிக்காரன்.

நாடோடியின் வாழ்க்கையில் முதல்முதலாக அவன் எதிர்பார்த்தபடி சம்பவிக்கும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

"நீர் எங்கே போராப்பிலே! பாவநாசத்துக்கா?" என்றான் வண்டிக்காரன்.

"ஆமாம்! யாரு வண்டி!"

"இந்தக் காட்டுலே பண்ணையெ எசமான் வண்டி தெரியாத ஆளுவளும் உண்டுமா! கல்லடக்குறிச்சி பெரிய அய்யரு வண்டி. பளைய பாவநாசத்துலே, பட்டணத்திலேயிருந்து அய்யமாரும் அம்மா மாரும் ஊரு பாக்க வந்திருக்காங்க! கூட சாமியாரும் வந்திருக்காரு. அவுங்க எல்லாம் சீசப் புள்ளெங்க. அவரைப் பாத்தால் சாமியாரு மாதிரியே காங்கலே. பட்டும் சரிகையுமாத்தான் கட்டராரு. கூட வந்திருக்காருவளே, கிளிங்கதான்!" என்று அடுக்கிக்கொண்டே போனான் வண்டிக்காரன்.

இதென்ன வேஷம் என்று ஆச்சரியப்பட்டான் நாடோடி. வண்டியின் ஒரு மூலையில் கிடந்த தியாசபி புஸ்தகங்கள் வந்திருப்பது யார் என்று விளக்கிவிட்டன. மனத்தின் குறுகுறுப்புச் சாந்தியானதும் வண்டிக்காரனின் பேச்சில் லயிக்கவில்லை.

'ஊச்'சென்று கொண்டு மனத்தை வெளியில் பறக்கவிட்டான் நாடோடி. அது, கூடு திரும்பும் பட்சிபோல பழைய நினைவுக் குப்பைகளில் விழுந்தது.

இன்று இந்த வண்டியில் ஏறியதுதான், இந்த நாற்பது நாற்பத்தைந்து வருஷங்களில் முதல்முதலாக அவன் விரும்பி நிறைவேறிய ஆசை.

'ஆசை! அதற்கும் மனிதன் சொல்லிக்கொள்ளும் இலட்சியம் என்பதற்கும் வெட்கமே கிடையாது. இலட்சியத்தால் நடக்கிறதாம். நீதியால் நடக்கிறதாம்; தர்மத்தால், காதலால் வாழ்க்கை நடக்கிறதாம்! உண்மையில் இதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? வாழ்க்கையில் ஒன்றுதான் நிஜமானது, அர்த்தமுள்ளது. அதுதான் மரணம். காதல், வெறும் மிருக இச்சை பூர்த்தியாகாத மனப்பிராந்தியில் ஏற்பட்ட போதை. நானும் சுகம் அனுபவிச்சாச்சு. என்னதான் பேசினாலும் இதற்குமேல் ஒன்றும் கிடையாது. அதற்கப்புறம் சமூகம். அன்றைக்கு அந்தப் பயல் ஜட்ஜ்மென்ட் சொன்ன மாதிரிதான்... பெரிய

புதுமைப்பித்தன் கதைகள்

333