நன்னய பட்டன் திசையறியாமல் சென்றான். பசியறியாமற் சென்றான். கைக்குழந்தையின் - மூன்று வயதுக் குழந்தையின் - சிறு தேவைகள் அவனுக்குப் பூத உடம்பின் தேவைகளை இடித்துக் கூறும் அளவுகோலாயின. அதன் பசியைச் சாந்திசெய்யும் பொறுப்பு இல்லாவிட்டால் அவனிடம் பசியின் ஆதிக்கம் தலைகாட்டியிராது.
அவன் அன்று ஆசைப்பட்டது எல்லாம் மரணத்தினின்றும் தப்புவதற்கு வழி.
ஏன் மரணத்தினின்றும் தப்பவேண்டுமென்று அவனிடம் யாராவது கேட்டிருந்தால் அவனால் காரணம் கூறியிருக்க முடியாது. ஆனால், பயம் என்று ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். மரணத்தை வெல்வதே - காலத்தின் போக்கைத் தடைசெய்வதே - ஆண்மை என்று பதில் சொல்லியிருப்பான். பேதை! மரணம் என்பது இல்லாவிடில் நரகம் என்பது எப்படித் தெரியும்!
அப்பொழுது அவனது சிறு மனம் குறிஞ்சிப்பாடிக்கு மேல் விரிந்து, அகில லோகத்தையும் கட்டி ஆள்வதற்கான மூல சக்திகளின் சூட்சுமக் கயிற்றைக் கைக்குள் அடக்க வேண்டும் என்று அறிவுகெட்ட ஆசையால் கட்டுண்டது.
இருண்டு நெடுநேரமாகியும் நடந்துகொண்டேயிருந்தான். கையில் குழந்தை, ஆசையற்று, ஆனால் வித்துக்களான தேவையில் மட்டும் நிலைக்கும் மனநிலையில் கட்டுண்டு, நித்தியத்துவத்திற்கும் மரணப் பாதையின் சுழலுக்கும் மத்தியிலுள்ள பிளவுக் கோட்டின் எல்லை வெளியான இடைவெளியில் நின்று உறங்கியது.
குறிஞ்சிப்பாடியின் வேதம் பொய்யாகும் நிலையை நன்னய பட்டன் நிதரிசனமாகக் கண்டான்.
நெடுநேரம் நடந்த களைப்பு, இருளின் கருவைப் போன்ற ஒரு குகை வாயிலில் சிறிது உட்கார வைத்தது.
உறக்கத்தை அறியாத கண்கள் குகைக்குள் துருவின.
அந்தக் குகைதான் பிரம்ம ராக்ஷஸாகத் தவிக்கும் ஒரு பழைய மனிதனுடைய ஆசையின் பயங்கரமான பலிபீடம்.
வெகு காலமாக அப்பாதையிலே யாரும் வரவில்லை.
மனித தைரியத்தின் உச்ச ஸ்தானமாக இருந்த அந்தக் குகையின் வாசலில் நன்னய பட்டன் உட்கார்ந்ததும் குழந்தை வீரிட்டு அலறத் தொடங்கியது. குழந்தையைத் தேற்றிப் பார்த்தான்; எவ்வளவோ தந்திரங்களைச் செய்து பார்த்தான். குழந்தையின் அலறல் நிற்கவில்லை.
அதைத் தோளில் சாத்திக்கொண்டு, முதுகைத் தட்டிக் கொடுத்த வண்ணம் எழுந்து உலாவி அங்குமிங்குமாக நடக்கத் தொடங்கினான். குகையின் வாசலைவிட்டு அகன்று செல்லும் பொழுது குழந்தையின் அழுகை படிப்படியாக ஓய்ந்தது. ஆனால், திரும்பிக் குகையை
புதுமைப்பித்தன் கதைகள்
357