விழுந்தது. நன்னய பட்டன், முன்னால் ஓர் அடியெடுத்து வைக்க முடியாது, கட்டுண்ட சர்ப்பம் போல நின்று, வெளிச்சம் விழுந்த மண்டையோட்டில் இருக்கும் கண்குழியை நோக்கினான். அதில் ஒரு புழு நெளிவது போலத் தோன்றியது.
அது புழுவா? அன்று.
ஒரு சிறிய கருவண்டு மெதுவாக வெளியேறி, ஒளி ஏணியில் ஏறிச் செல்வதுபோல் சிறகை விரித்து ரீங்காரமிட்ட வண்ணம் பறந்து சென்று முகட்டிலிருந்த இடைவெளியில் மறைந்தது.
மறைந்ததுதான் தாமதம்! அந்தத் துவாரத்திற்கு வெளியே அண்ட கோளமே இற்றுவிழும்படியாகக் காதைச் செவிடாக்கும் இடிச் சிரிப்பு! அது அந்த அமைதியின் நிலையமான சூரங்காட்டையே ஒரு குலுக்குக் குலுக்கியது.
நன்னய பட்டன் உடல் வியர்த்தது. அவனது பூதவுடல் கட்டுக் கடங்காது நடுங்கியது; ஆனால், கண்கள் மட்டிலும் பயப்பிராந்தியில் அறிவை இழக்கவில்லை. அசாதாரண விவகாரத்தில் தூண்டப்பட்டு உண்மையை அறியத் தாவுகிறது என்பதை உணர்த்தும் பாவனையில் எலும்புக்கூடு கிடக்கும் இடத்தையும் வண்டு மறைந்த திசையையும் ஒருங்கே கவனித்தான்.
வெடிபடச் செய்த சிரிப்பு மங்கியதும் சூரிய கிரணம் மறைந்தது. அசாதாரணமாக அமைதி பிறந்தது.
நன்னய பட்டன் குகையைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினான்.
கற்பாறைப் படுக்கைக்கு மறுபக்கம் குகையின் ஒரு சுவர். அதன் மேல் இருளிலும் தெரியக்கூடிய ஒளித் திராவகத்தால் சிவப்பாக எழுதப்பட்டது போன்ற யந்திரம். அதன் ஒரு பாகத்தில் தாமரைப்பூ ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. தாமரை மலரின் இதழ்கள் எலும்புக் கூட்டின் மார்பகத்துக்கு நேராக இரண்டடி உயரத்தில் சுவரின் மேல் இருந்தன.
கற்பலகையில், எலும்புக்கூட்டிற்கும் சுவருக்கும் உள்ள ஒரு சிறு இடைவெளியில், சுவரில் இருப்பதைப் போலவே யந்திரம் செதுக்கப்பட்டு அதன் மையத்திலும் ஒரு செந்தாமரைப் புஷ்பம் செதுக்கப்பட்டிருந்தது. கற்பலகையில் வரையப்பட்ட யந்திரம் இருளில் பொன்னிறமாக மின்னியது. தாமரை மலர் வெண்மையான பளிங்கினால் செய்து பொருத்தப்பட்டதுபோல் இருந்தது.
நன்னய பட்டன் அதன்மீது கையை வைத்துத் தடவிப் பார்த்தான். அது தனியாகச் செதுக்கிப் பாறையில் பொருத்தப்படாத விசித்திரமாக இருந்தது. அது எப்படி அமைக்கப்பட்டது?
எலும்புக்குக்கூடு ஆறடி நீளம். உயிருடன் இருந்தபொழுது அம்மனிதன் ராக்ஷஸன் போல இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு நினைத்துக்கொள்ளவே, நன்னய பட்டன் வேறு பக்கமாகத் தலையை நிமிர்த்தி நோக்கினான்.
360
பிரம்ம ராக்ஷஸ்