உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெட!' என்றால் கேட்கிறானா?... எப்பப் பார்த்தாலும் சண்டை, சண்டை, சண்டை! எப்பப் பார்த்தாலும் போராட்டந்தான்! அதோ போகுது பாருங்க, அந்தக் களுதை! கூப்பிட்டு, எசமான் மின்ன வச்சுக் கேக்கரேன்... 'ஏலே அய்யா, சுப்பு!' என்று குரலெடுத்துக் கூப்பிட்டார் வேளார்.

"'பயல் கெடக்கிறான் வே! சவத்தெ தள்ளும்! நாலு காயிலே என்ன பெரமாதம்! இவன் எடுக்காட்டா அணில் கொத்தித் தள்ளுது... நான் சொல்றது என்னன்னா இந்த வயசிலேயே இது ஆகாது!' என்றார் பேச்சியாபிள்ளை.

"'பிள்ளைவாள்! நீங்க சொல்றது நூத்துக்கொரு வார்த்தை' என்றார் விசுவநாத தீட்சதர்.

"'ஆமாம் எசமான்!' என்று ஏங்கினார் மருத வேளார்..."

"நீங்கதான் ஏன் சும்மா இருக்கிறீர்கள்? பிள்ளையாரை எடுத்து வைத்தால் ஆகாதோ?" என்று சொல்லிக் கொண்டு வந்தாள் என் மனைவி.

"அதெல்லாம் முடியாது. நான் நாஸ்திகன். அதெல்லாம் குடும்பவிளக்கு குலவிளக்கு 'டிபார்ட்மெண்ட்'!" என்றேன். நான்.

"மஹா 'டிபார்ட்மெண்'டைக் கண்டுவிட்டீர்களாக்கும்! சோம்பல் என்றால் அப்படிச் சொல்றதுதானே! எல்லா நாளுமா... கை வேலையா இருக்கே!" என்று பெருங்காய டின்னை எடுத்துக்கொண்டே அவள் சொன்னாள்.

அதற்குள் என் மன ராணி என்னை மடியைப் பிடித்திழுத்தாள். இரண்டு பொண்டாட்டிக்காரன் பாடுதான்...

"சுப்பு வேளானுக்குப் பதினாறு வயது. அப்பொ மதத்திலே கிறுக்கு விழுந்தது. நாலு நாள் ஓயாது ஒழியாது அற்புதமாக விக்ரகங்கள் செய்வான்... அப்புறம் அது பழைய களிமண்தான்... வேளார் தள்ளாத வயசிலேயும் குடும்ப போஷணையைக் கவனிக்க வேண்டியதாச்சு.

"அப்பொப் பார்த்து அந்தக் கசமுத்து வேளார் மகளிடம் தடித்தனமா நடந்து கொண்டானாம் சுப்பு. சாயங்காலம் அந்தப் பெண் இசக்கி அம்மை, தண்ணீர் எடுக்க ஆற்றங்கரைக்கு வந்தாளாம்... இவன் போய் அவள் எதிரில் நின்று கொண்டு, 'ஏட்டி! என்னைக் கலியாணம் பண்ணிக்கிறியா?' என்று கேட்டானாம்.

"உள்ளுக்குள் பூரிப்போ என்னவோ! பானையைக் கீழே போட்டு உடைத்து, 'ஓ, ராமா!' என்று அழுதுகொண்டு, 'இவன் என்னை இப்படிக் கேக்க ஆச்சா?' என்ற நினைப்பில் வீட்டுக்குச் சென்றாளாம்.

"ஊர்க்காரர்கள் இவனை அடிக்கக் கூடிவிட்டார்கள். இவன் தோழர்கள் எல்லாம் இவனுக்குப் பரிந்து பொய் சொல்லியும், 'விளையாட்டுக்குச் சொன்னான்' என்று சொல்லியும் பார்த்தார்கள்.

"இந்தப் பயல் ஒரே பிடிவாதமாக, 'நெசத்துக்குத்தான் கேட்டேன்!' என்றானாம். அன்றைக்கு நல்ல உதை. இந்த சமாசாரம் மருத

புதுமைப்பித்தன் கதைகள்

371