உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"அதுவும் அப்படியா! இன்னா இந்த [1]மிளவொட்டியிலே [2]மூணு துட்டு இருக்கு. அதெ எடுத்துகிட்டுப் போங்க!"

"வந்ததுக்கு ஒரு வேலையா? அங்கே ஒரு பாடு எழுதித் தொலைக்கணும். இங்கே உனக்கு இப்பத்தான் எண்ணெ புண்ணாக்கு - பகலெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தே? இருட்ன பொறவா என்னை வாங்குறது! எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்!"

"சோம்பல் வந்தா சாத்திரமும் வரும். எல்லாம் வரும். ஏன் அண்ணைக்குப் போய் வாங்கிட்டு வரலியா? எல்லாம் உங்களுக்குத்தான். இப்பத்தான் அப்பளக்காரன் வந்து கொடுத்துட்டுப் போனான்; பிரியமா சாப்பிடுவேளென்னு சொன்னேன். பின்னே அந்தச் சின்னக் கொரங்கே என்ன இன்னும் காணலே! போனப்ப போனதுதான்; நீங்கதான் சித்த பாருங்களேன்!"

இவ்வளவிற்கும் அவர் இருந்தால்தானே! விறகுப் பிரதேசத்தைத் தாண்டி வழுக்குப் பிரதேசத்தை எட்டிவிட்டார். புகையையும் பேச்சையும் தப்பி வந்தால் போதும் என்றாகி விட்டது. முருகதாசரின் ஆஸ்தான அறையின் ஒரு விசித்திரம் என்னவென்றால் சென்னையில் 'லைட்டிங் டைம்' அட்டவணையைக் கூட மதிக்காமல் அது இருண்டுவிடும்.

இம்மாதிரி மண்ணெண்ணெய் நெருக்கடி ஏற்படாத காலங்களில் அந்த அறைக்குத்தான் முதலில் இராத்திரி. ஆனால் எண்ணெய் நெருக்கடிக் காலங்களில் சிவபெருமானின் ஒற்றைக் கண் போன்ற அந்த அறையின் சன்னல், எதிர்ப்பக்கம் நிற்கும் மின்சார விளக்குக் கம்பத்திலிருந்து கொஞ்சம் வெளிச்சத்தைப் பிச்சை வாங்கும். கார்ப்பொரேஷன் தயவு வரும் வரை, ஸ்ரீ முருகதாசர் வேறு வழியில்லாமல் தெரு நடையில் நின்று அலமுவின் வருகையை எதிர்நோக்கியிருக்க வேண்டியதாயிற்று.

முருகதாசர் வானத்தை அளக்கும் கதைகளைக் கட்டுவதில் மிகவும் சமர்த்தர்; 'சாகாவரம் பெற்ற' கதைகளும் எழுதுவார். அந்தத் திறமையை உத்தேசித்து, ஒரு விளம்பரக் கம்பெனி மாதம் முப்பது ரூபாய்க்கு வானத்தையளக்கும் அவரது கற்பனைத் திறமையைக் குத்தகை எடுத்துக் கொண்டது. அதனால் அவர் வீர புருஷர்களையும், அழியாத சித்திரங்களையும் எழுத்தோவியமாகத் தீட்டுவதை விட்டு விட்டு, சோயாபீன் முதல் மெழுகுவர்த்தி வரையிலும் வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் பண்டங்களின் காவியங்களை இயற்றிக் கொண்டிருக்கிறார். 'டபாஸா' வீரிய மாத்திரையின் மீது பாடிய பரணியும், தேயிலைப் பானத்தின் சுயசரிதையும், அந்தத் தமிழ்


  1. மிளவொட்டி (மிளகுப் பெட்டி) - ஐந்தரைப் பெட்டி என்பது சகஜமான பெயர்
  2. மூணு துட்டு- ஓர் அணா; ஒரு துட்டு என்பது பாண்டி நாட்டில் நான்கு தம்பிடி

புதுமைப்பித்தன் கதைகள்

377