உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தில் வைத்துப் பார்க்கும்போது புதுமைப்பித்தனின் எழுத்து அளவில் அதிகமானதுதான். நாளிதழ்களில் பணியாற்றியவர் தான் பெற்றிருந்த குறைந்த கால அவகாசத்தில் இந்த அளவுக்கு எழுதியிருப்பது வியப்பைத் தருகிறது. சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம், நாவல், வாழ்க்கை வரலாறு போன்ற படைப்புருவங்கள் அனைத்தும் அவரைக் கவர்ந்து எழுதத் தூண்டியிருக்கின்றன. இருப்பினும் அவருடைய படைப்புகளில் மிக முக்கியமானவை சிறுகதைகள்தான். சமீப காலத்தில் தேடி எடுக்கப்பட்ட சிறுகதைகளையும் சேர்த்து நூற்றுக்கும் சற்று குறைவானவை இன்று படிக்கக் கிடைக்கின்றன. அவர் எழுதத் தொடங்கிய 1934ஆம் வருடத்தில் மட்டும் நாற்பது நாற்பத்தைந்து கதைகள் எழுதியிருக்கிறார். வெகு ஆவேசமான ஆரம்பத்தையே இது காட்டுகிறது. இக்கதைகளில் பெரும்பான்மையானவை பற்றி மிக உயர்வாகச் சொல்வதற்கு இல்லை என்றாலும் அவருடைய மற்ற கதைகள்போல் இவற்றிலும் அவருக்கே உரித்தானபார்வை ஊடுருவி நிற்கிறது எனலாம். நூதனமான தெறிப்புகளும் வீச்சுகளும் கொண்ட அவர் மொழி, கிண்டல், விமர்சனம், அநாயாசமான எழுத்துப் போக்கு, பொருள் சார்ந்தும் வடிவம் சார்ந்தும் மரபை மீறிச் செல்லும் ஆவேசம், எல்லைக் கோடுகளை அழித்துச் செல்லும் கதந்திரத்தின் வீச்சுகள், சகல மதிப்பீடுகளையும் பாரபட்சமின்றிப் பரிசீலனைக்கு உட்படுத்துதல் ஆகிய குணங்களை நெடுகிலும் பார்க்கலாம்.

ஒரு படைப்பாளியாக மலர்ச்சி பெறப் புதுமைப்பித்தனைத் தூண்டிய அனுபவங்கள் எவை என்ற கேள்வி எழலாம். அவை பற்றித் திட்டவட்டமான முடிவுகளுக்கு வருவது சற்றுக் கடினம்தான். இன்று அவரது படைப்புகள் நம்மிடம், அநேகமாக, முழுமையாகவே இருக்கின்றன. அதற்கு மேல் அவருடைய வாழ்க்கை வரலாறும் முழுமையானது என்று கூற இயலாது என்றாலும் - நம்மிடம் இருக்கிறது. இவ்விரண்டிலிருந்தும் இவற்றின் இணைப்பிலிருந்தும் நாம் பெறும் ஒளிக்கீற்றுகள் புதுமைப்பித்தனின் வாழ்க்கைக்கும் அவரது படைப்புக்களுக்குமான உறவு சார்ந்து எத்தனையோ அனுமானங்களுக்கு நம்மை இழுத்துக் கொண்டு போகின்றன. ஒன்று தெளிவானது. வாழ்க்கையில் தான் பெறும் அனுபவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் இயல்பு கொண்டவர் அவர். அவரது படைப்புகள் இந்த உண்மையை ஆமோதிக்கின்றன. படைப்புகளில் பளிச்சிடும் அனுபவ முத்திரைகள், ஒரு வாசகனின் மனத்தில் கண்டுபிடிப்புகள் சார்ந்த ரசனையை உருவாக்கிக் கொண்டே போகின்றன. சுய அனுபவம் சார்ந்த தடயங்கள் மறைந்து போகும் அளவுக்கு, அதீதமான கற்பனைகள் கவிழும் கதைகளில்கூட, ஆதாரமான விதை சுய அனுபவம் சார்ந்ததுதான் என்ற உணர்வே ஏற்படுகிறது.

வாழ்க்கை அனுபவங்கள் என்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால் சில வகையான அனுபவங்கள் படைப்பாளியின் மனத்தில் ஆழமாகப் புதைந்து படைப்புகளில் மீண்டும் மீண்டும் கழன்று வருகின்றன. இந்த ஆழமான பாதிப்புகளை அடிப்படையாக வைத்துத்தான் அந்த ஆளுமையின் அக்கறைகளை நாம் இனங்கண்டு கொள்-

38