உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாசகாரக் கும்பல்


டாக்டர் விசுவநாத பிள்ளை (வெறும் சென்னை எல்.எம்.பி. தான்) சென்ற முப்பது முப்பத்தைந்து வருஷமாக ஆந்திர ஜில்லாவாசிகளிடை யமன் பட்டியல் தயாரித்துவிட்டு, பென்ஷன் பெற்று, திருச்செந்தூர் ஜில்லா போர்டு ரஸ்தாவில் பாளையங்கோட்டைக்கு எட்டாவது கல்லில் இருக்கும் அழகியநம்பியாபுரம் என்ற கிராமத்தில் குடியேறினார். (என் திருநெல்வேலி நண்பர்கள் அழகியநம்பியாபுரத்தைத் தேடி ஜில்லாப் படத்துடன் மோதி மூளையை வரள வைத்துக் கொள்ள வேண்டாம். அதில் இல்லை.)

ஏறக்குறைய அதே சமயத்தில் தான், குடிமகன் மருதப்பனும் இலங்கைத் தோட்டத் துரைகளுக்கு க்ஷவரகனாக இருந்து, படிப்படியாகக் கொழும்பு கோட்டைத் தெருக்களில் ஸலூன் வைக்கும் அதிர்ஷ்டமடைந்து, அதில் ஒரு பத்து வருஷ லாபத்தாலும், அங்கு சிறிது மனனம் செய்து கொண்ட 'வாகட சாஸ்திரம்', 'போகர் இருநூறு', 'கோரக்கர் மூலிகைச் சிந்தாமணி' இவற்றின் பரிச்சயத்தாலும் உயர்திரு. மருதப்ப மருத்துவனாராகி அழகியநம்பியாபுரத்தில் வந்து குடியேறினான்.

இவ்விருவரும் இவ்வூருக்கு ஒரே சமயத்தில் படையெடுத்தது தற்செயலாக ஏற்பட்ட சம்பவம். ஆனால், அழகியநம்பியாபுரத்தில் இவர்கள் வருகைக்கப்புறம் ஒரு மறைமுகமான மாறுதல் ஏற்பட்டது.

ஸ்ரீ விசுவநாத பிள்ளை சாதாரண வேளாளர் வகுப்பில் பிறந்து, வைத்தியத் தொழில் நல்ல லாபம் தரும் என்ற நம்பிக்கையில் வாலிப காலத்தில் அதில் ஈடுபட்டார். அந்தக் காலத்தில் வைத்தியக் கல்வி படிக்க வருகிறவர்களுக்கு 'ஸ்டைப்பன்ட்' (உபகாரச் சம்பளம்) கொடுத்ததும் இவருக்கு இந்தத் தொழிலில் ஆசை விழ ஒரு தூண்டுகோல் என்று சொல்ல வேண்டும். மேலும், அக்காலத்தில் சர்க்கார் உத்தியோகம் கைமேலே. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளைக்கார வைத்திய சாஸ்திரம் இவ்வளவு பிரமாத அபிவிருத்தியடையவில்லை. உளுத்துப்போன அந்த 'மெடீரியா மெடிகா'வும் சீமையிலிருந்து தளும்பி வழிந்த வைத்திய சாஸ்திரமுமே இந்திய

புதுமைப்பித்தன் கதைகள்

407