இடையூறு ஏற்படாதபடியும், கீழே உட்கார்ந்திருப்பவர் மீது சிறிதும் தெறிக்காதபடியும் லாவகமாகத் தலையை வெளியே நீட்டி அவர் துப்பும்போது, கடையின் பக்கத்துச் சுவரில் துப்பாமலிருப்பதற்கு நீண்ட நாள் அனுபவம் மட்டும் போதாது; அதற்குத் தனித் திறமையும் வேண்டும் என்பது தெரியும். ஆனால் கப்புப் பிள்ளையின் தனித் திறமை கேட்டிருக்கும் மறவர் கண்களில் படவில்லை. உலகத்தில் புகழையும் பெருமையும் சமாதி கட்டித்தானே வழிபடுகிறார்கள்! அழகியநம்பியாபுர மறவர்களுக்கும் இந்தத் தத்துவ இரகசியம் தெரிந்திருந்தது என்றால் அவர்களைப் பற்றி மனிதர்கள் என்று நம்பிக்கை கொள்ளாமல் வேறு என்ன செய்வது?
மலையாளம் போனியானா, ஏ, சுடலே!
நீ மாறி வரப் போரதில்லை!...
என்று இழுத்தார் பிள்ளை.
"ஆமாமிய்யா! மலையாளத்திலே அந்தக் காலந்தொட்டே கொறளி வேலைக்காரனுவ இருக்கானுவளா?" என்றான் பலவேசத் தேவன் என்ற அநுபவமில்லாத இளங்காளை. அவனுடைய முறுக்கேறிய சதை அவன் வேலை செய்கையில் உருண்டு நெளிவதைச் சாப்பாடில்லாமலே பார்த்துக்கொண்டிருக்கலாம். அவன் தலையாரித் தேவனின் மகன்.
"நீ என்னலே சொல்லுதே? அந்தக் காலத்துலேதான் இந்த வித்தை பெரவலம். சொடலையையே சிமிளிலே வச்சு அடச்சுப் பிட்டானுவன்னா பார்த்துக்கிடேன்!" என்றான் வேலாண்டி. அவன் ஒரு கொண்டையன் கோட்டையான் (மறவர்களுக்குள் ஒரு கிளை). வயது விவேகத்தைக் குறிக்க வேண்டிய நரைத்த தலை அந்தஸ்தைக் கொடுத்தது; ஆனால் உடல் அநுபவமற்ற இளங்காளைகளின் கட்டு மாறாமல் இருந்தது. வாரத்திற்கு நிலத்தைக் குத்தகை எடுத்து, அதில் ஜீவிக்க முயலும் நம்பிக்கையின் அவதாரமான தமிழ்நாட்டு விவசாயிகளில் அவன் ஒருவன். இடுப்பில் வெட்டரிவாள் ஒன்று வைத்திருப்பான். அதன் உபயோகம் விறகு தறிப்பது மட்டுமல்ல என்று தெரிந்தவர்கள் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், நாணயஸ்தன்; பொய் சொல்லுவது மறக் குலத்தோர்க்கு அடுக்காது என்று பழக்கத்திலும் அப்படியே நடப்பவன்.
இந்த இடைப் பேச்சைக் கேட்ட சுப்புப் பிள்ளை, கண்ணில் போட்டிருந்த பித்தளைக் கண்ணாடியை நெற்றிக்கு உயர்த்தி, சிறிது அண்ணாந்து பார்த்து, "அட்டமா சித்தியும் அங்கேயிருந்துதான் வந்திருக்கிறது. புராணத்திலேயேதான் சொல்லியிருக்கே!" என்று ஒரு போடு போட்டார்.
இப்படிப்பட்ட விஷயங்களில் சுப்புப் பிள்ளையின் தீர்ப்புக்கு அப்பீலே கிடையாது; ஏனெனில், பெரும்பாலும் அழகியநம்பியாபுரவாசிகளில் பலர் அவரிடமே குட்டுப்பட்டு சுவடிப் பாடம் கற்றிருக்கின்றனர். பலவேசமும் இதற்கு விதிவிலக்கல்லன்.
410
நாசகாரக் கும்பல்