உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிடுங்கி வைத்துக் கொண்டு, குளக்கரை மேல் போகும் ரஸ்தாவில் ஏறி, மறுபுறம் செங்குத்தாக இறங்கும் கல்லடுக்கிய சரிவு வழியாக இறங்கி, மருத்துவ மருதப்பனார் பச்சிலைகளைக் குளத்திலிட்டு அலச ஆரம்பித்தார். தலையில் முக்காடாக அணிந்திருந்த துணி, விலகி விலகிக் குனிந்து வேலை செய்வதற்கு இடைஞ்சல் கொடுத்ததால் நிமிர்ந்து நின்று தலையில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு மறுபடியும் குனிந்தார்.

"வைத்தியரய்யா! என்ன, தெரஸர், பிள்ளைவாள் ராவோட ராவா மூக்கன் நெலத்தைக் கொத்திக்கிட்டுப் போயிட்டாகளாமே!" என்ற குரல் மருத மரக்கிளை ஒன்றிலிருந்து கேட்டது.

அண்ணாந்து பார்த்தார். மருதக் கிளை ஒன்றிலிருந்து கீழே நிற்கும் ஆடுகளுக்குக் குழை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தான் வேலாண்டி.

"ஊர் வெள்ளாளன்மாரு கூடிக்கிட்டா என்ன? ஆனைக்கு ஒரு காலம்னா பூனைக்கு ஒரு காலம் வரும். பண்ணையப் பிள்ளைவாளுக்கு அந்த நெலம் வந்துதான் நெரயணுமாக்கும்; வாங்கினா ஒரே வளவாப் போயிடுமேன்னு நெனச்சேன். சவத்துக்குப் பொறந்த பயஹ பேச்சேத் தள்ளு!"

"ஆமாம். மூக்கம் பய கொளும்புக்கில்லா போயிட்டானாம்... அந்தப் பயலுக்கு என்ன அவசரம் இப்பிடி அள்ளிக்கிட்டுப் போவுது..."

"மூதி தொலைஞ்சுட்டுப் போகுது. அண்ணெக்கி வந்து மூக்காலே அளுதானேன்னு பாத்தேன்... ஊர்லே தேவமாருன்னு பேர் வச்சுக் கிட்டு பூனையாட்டம் ஒண்டிக்கெடந்தா என்னதான் நடக்காது... புள்ளைமாருக்குன்னுதான் இந்த வூரா... அப்போ நாங்க போயிருந்தோம்... அதெத்தான் அத்துப் பேசட்டுமே... என்னடே தொப்ளான், எங்கே அவசரம்?" என்றார் வைத்தியர்.

தலை தெறிக்க ஓடிவந்த தொப்ளான், "நீங்க இங்கியா இரிக்கிய, தெரஸய்யா சமுசாரத்துக்குத் தடபுடலாக் கெடக்கு, ஒங்களெ சித்த சத்தங்காட்டச் சொன்னாவ - டவுன் பஸ்ஸு போயிட்டுதா? பாத்தியளா?" என்று பஸ் எதிர்பாக்கப்பட்ட திசையை வெறிக்கப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

"அதுவும் அப்பிடியா! காத்தெக் கட்டிப்போட முடியுமா? வேலாண்டி, நான் அப்பம் ஒரு சேதி சொன்னேனே பாத்தியா - பாத்துக்கோ..."

ஈரம் சொட்டும் பச்சிலை முடிப்போடு குறுக்குப் பாதை வழியாக ஊரை நோக்கி நடந்தார் மருத்துவர்.

"என்னடே! தொப்ளான் - நீ எங்கலே போரே...?"

"நான் ஒரண்டையும் போகலே... பட்டணத்து எசமான் பெரிய டாக்குட்டரெக் கூப்பிட டவுனுக்குப் போராவ..."


420

நாசகாரக் கும்பல்