உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களுக்கு நான் உதாரணங்கள் தரத் தொடங்கினால் அது சுலபத்தில் முடியும் காரியமாக இருக்காது. அறுபது வருடங்களுக்கு முன்னால் அவர் உருவாக்கிய தமிழ் இன்றும் பெரும்பாலும் அலுப்பின்றிப் படிக்கக்கூடியதாகவே இருக்கிறது. நேற்றையத் தமிழ் என்ற அனுதாபத்தை நாம் அதற்கு வழங்க வேண்டியதில்லை. படைப்புச் சார்ந்த தன் நம்பிக்கைகளை, விளைவுகளைப் பற்றிய அச்சம் சிறிதும் இன்றி முன்வைக்கும்போது அச்சொற்கள் கொள்ளும் உணர்ச்சியில் அவை உச்சாடனத்திற்குரிய மந்திரம்போல் மாறிவிடுகின்றன. இப்பகுதிகள்தான் விமர்சகர்களால் மீண்டும் மீண்டும் சலிப்பின்றி மேற்கோள் காட்டப்பட்டு வருகின்றன.

அவர் கதை சொல்லும் பாங்கில் பொருள் சார்ந்த மீறலுக்கான ஒரு வாய்ப்பை வாசக மனம் எதிர்நோக்கிக் கொண்டே இருக்கிறது. பல சமயங்களில் இந்த மீறல் நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. அதிர்ச்சி ஆர்வத்தை ஊட்டுகிறது. 'உணர்ச்சியின் அடிமைகள்' என்ற கதையில் கதாநாயகனுக்குக் கல்யாணமாகி இன்னும் மூன்று நாட்கள்கூட ஆகவில்லை. அவனது மனநிலை பற்றி ஒரு வருணனை: 'ஏடுகள் (அவன் கையில்) புரண்டு கொண்டிருக்கின்றன. கண்கள் கனவு கொண்டிருக்கின்றன. மனம் சிருஷ்டித்தொழிலைக் கைக்கொண்டால் பிறகு எவ்விதம் இருக்கும்?' கண்கள் கனவு கொண்டிருப்பதை அடுத்துப் பச்சையாக ஒரு வாக்கியம் தொப்பென்று வந்து விழுகிறது. அன்றைய எழுத்தில் இச்சுதந்திரம் அபூர்வமானது. காதலுக்கு அடிப்படையாக மனத்தை மட்டுமே கண்டு அழுத்தும் எழுத்துமுறைக்கு எதிரான மனோபாவம் இது. கணவன் இருக்க காதலனிடம், 'இங்கேயே இருந்துவிடுங்கள்' என்கிறாள் கலியாணி (கலியாணி). கௌதமர், இந்திரனுடன் உடல் உறவு கொள்ள நேர்ந்துவிட்ட அகல்யையை, 'மனத்தூய்மை தான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்?' என்கிறார் (அகல்யை). மருதி தன் குழந்தையைக் கணவன் எடுத்துச்செல்ல, 'அது அவனுக்குப் பிறந்ததுதான்' என்று உறுதியளிக்கிறாள் (துன்பக்கேணி). அம்மாளு தன் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்ப்பதற்காக சோரம் போகிறாள் (பொன்னகரம்). ராமு என்ற எட்டு வயது சிறுவன் தான் காணும் கனவில் தன் கையிலிருக்கும் தடிக்கம் பால் பூகோள வாத்தியாரைத் தாக்குகிறான் (மோட்சம்). ரிக்ஷாக்காரன் குப்பன் தன்னை அலட்சியம் செய்த கிராக்கி தன்னைத் தேடி வந்ததாகப் பகற்கனவு கண்டு அதில், '...வேண்ணா வெளிலே ரிக்ஷா நிக்குது; இஸ்து பொயிச்சுக்கோ...' என்கிறான் (குப்பனின் கனவு). பழம்பெருமையைத் தாக்கும் பார்வைகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. வேதாளம் சொன்ன கதை'யில் வேதாளம், 'முன்னே திரிபுரத்தை எரித்தாரே இந்தச் சிவன், இப்போ அவராலே அந்தக் குருவிக் கூட்டைக்கூட எரிக்க 'முடியாது' என்கிறது. இதுபோல் பழமையைச் சொடுக்கும் வாக்கியங்கள் பல கதைகளில் வருகின்றன.

புதுமைப்பித்தன் கதைகளில் பல்வேறுபட்ட கதாபாத்திரங்கள் வருகிறார்கள். கணவர்கள், மனைவிகள், மாணவர்கள், குழந்தைகள்,

44