உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்ரீமான் புரட்சியின் ரசனை கொஞ்சம் கட்டை போலும் "அவர் அசல் கோதுமை சப்பாத்திதான் சார். பஞ்சாபிக்காரன் மாதிரிச் சாப்பிடுவார்" என்றார், பாவம் ஸ்ரீமான் புரட்சி.

சரி, நேரம் சரியில்லை என்று நினைத்துக்கொண்டு, "உம்மிடம் ரெண்டு ரூபாய் கடன் வாங்க வேண்டுமென்று வந்தேன். நாளைக்கும் வருவேன். உம்மால் என்னை ஏமாற்ற முடியாது" என்று சொல்லிக்கொண்டு வெளியேறினேன்.

உப்பங்காற்று மட்டிலும் வீசும் சமுத்திரக் கரைக்குப் போகும் பொழுதுதான் விஷமத்தனமான என் கசப்பு என்னைவிட்டு அகன்றது.

அப்பொழுது அங்கு வந்தான் ஸ்ரீ பாலு; மெஸர்ஸ் பீபரிவாலா ஹுக்கும் சந்த் அண்ட் சன்ஸ் கம்பெனியின் பல ஜோலி குமாஸ்தா. கம்பெனியில் காப்பிக் கொட்டை கேஸ்களுக்கு ஆணியடித்து விலாசம் ஒட்டுவது முதல் வரவு செலவு கணக்கு தயாரிப்பது, சேட்ஜி மகள் ஸோனியாவுக்கு வர்ணப் பென்ஸில் வாங்கிக் கொடுப்பதுவரை உள்ள வேலைகள் எல்லாவற்றையும் விரக்தியுடன் செய்யும் அபேதவாதி அவன்.

"என்ன சார் இப்படி உட்கார்ந்திருக்கேள்! ஹி! ஹி! போன வாரம் நீங்க எழுதின கதை ரொம்ப ஜோர் சார், வாழ்க்கையின் நுணுக்கங்களை அப்படியே எழுத்தோவியமா பண்ணியிருக்கேள் சார், ஹி! ஹி!" என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். அவன் அடிக்கடி என் கதைகளைப் படிப்பான். அதைவிட என் விமர்சனங்களைப் படிப்பான். முக்கால்வாசி என் கைச்சரக்கே என் தலைமேல் தூக்கிப்போட்டு உடைக்கப்படும்.

என்ன இருந்தாலும் புகழல்லவா சார்? யாருக்குத்தான் இழக்க மனசு வரும். வர்ணக் கடுதாசி ஒட்டிய ஜப்பான் விளக்கு மாதிரியான சுடாத புகழ் வெளிச்சத்தில் உடம்பைக் கொஞ்சம் காயவைத்துக் கொண்டேன்.

'...' என்ற பத்திரிகையைக் குறிப்பிட்டு "போன வருஷம் மே மாசப் பிரதியைப் பார்த்தீர்களா?" என்றான்.

"எதற்கு?" என்றேன்.

"அதிலே ஓர் ஆழ்ந்த உண்மை இருக்கு; பார்த்தேன் சார். நேற்று இப்படி மூர் மார்க்கெட் பக்கம் போனேன். இதை அடுக்கியிருந்தான். அட்டைப் படம் எல்லாம் கிழிஞ்சு போச்சு. காலணாவுக்கு ரெண்டுன்னான். ஏன் சார் நமக்கு விஷயந்தானே வேணும். அப்படியே ஒரு ரெண்டணாவுக்கு ஒரு கத்தை வாங்கினேன். நம்ம வீட்டுக்காரி இருக்காளே, அவளுக்குக் காகிதக் கூடை பண்ணணுமாம், அப்படியே குடுத்துடுன்னு வாதாடினாள். அதிலே ரொம்ப விஷயங்கள் இருக்கு, படிச்சுட்டுத்தான் தருவேன்னுட்டென். எப்பப் பார்த்தாலும் இந்தத் தொந்திரவுதான் சார். நல்ல கோட் சார், மூணா வருஷந்தான் வாங்கினது. கை ஓரத்திலேதான் கொஞ்சம் கிழிசல்.

புதுமைப்பித்தன் கதைகள்

451