உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிநவ-ஸ்நாப்‌


பாங்கியில் இருந்த இரண்டாயிரத்துச் சில்லறை ரூபாய் ஒத்தி வைக்கப்பட்ட - மாஜி மந்திரி வாசஸ்தலமாக இருந்த பங்களாவிற்கு எதிர்வீடு 'ஸ்ரீ நிவாஸ்' ஆனபொழுது, வரதவேங்கடராமன் அபினவ - ஸ்நாப் ஆனார். இந்த விபத்து ஏற்படுமுன் சென்னையின் தொண்ணூற்று ஒன்பதாவது பெரிய குடும்பஸ்தன், சந்துபாய் லல்லுபாய், சணல், வெங்காய வியாபாரக் கம்பெனியின் ஹெட்குமாஸ்தா. அவருக்கு ஒன்பதாவது வயதில் ஆனி மாதம் (நல்ல சுப லக்கினத்தில்தான்) இந்த விபத்து ஏற்பட்டது.

ஸ்நாப் என்றால் என்ன என்பதைச் சொல்லிவிடுகிறேன். நாகரீகமானவர்கள், நல்லவர்கள் (முக்கியமாக மெஜாரிட்டியினர்) அங்கீகரிக்கும் கொள்கைகளை, செய்யும் காரியங்களை ஒப்புக் கொள்வதற்காக, தானும் பின்பற்றுவதாகப் பாவனை செய்தல். அஸ்திவாரமில்லாத கட்டடமாகையால் எப்பொழுதும் மூக்கு கொஞ்சம் நெற்றிக்குமேல் உயர்ந்து காற்றில் மிதக்கும். நாசி நுனியில் பார்வையை நிறுத்தினால் என்னவெல்லாமோ தெரியும் என்பார்கள் யோகிகள். தங்க விளிம்பு கண்ணாடி வழியாக மூக்கின் நுனியில் ஸ்நாப்களின் பார்வை கவிந்தே இருக்கும். அவர்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மாத்திரம் நிச்சயமாகத் தெரியும். எதிரில் நிற்கும் உம்மையும் நம்மையும் போன்ற சாதாரண பேர்வழிகள் மனிதப் பிராணிகளாகக் கூட அவர்களுக்குத் தோன்றாது.

ஸ்ரீமான் வரத வேங்கடராமன், இருளப்பன் சந்து 49-ம் நம்பர் வீட்டு மாடியில் ஐந்து குழந்தைகளுடன் (மனைவி ஒன்றுதான்) இருந்தபொழுது - முதல் மகன் சர்வீஸ் கமிஷன் பாஸ் பண்ணி வீட்டிலிருக்கிறான்; ரங்கநாயகிக்குக் கூடிய சீக்கிரத்தில் சாந்தி நடத்த வேண்டும் - கடன் வாங்கத் தெரியும்; மிச்சம் பிடிக்கத் தெரியும்; லல்லுபாய் கணக்குகளை ஆடிட் செய்யத் 'தயார்' பண்ணவும், குடும்பத்தின் நுணுக்க விவகாரங்களில் உள் வீட்டு மந்திரியுடன் அபிப்ராய பேதம் கொள்ளவும் தெரியும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'ஹிந்து' பத்திரிகை என்று ஒன்று இருப்பதாகத் தெரிந்துகொண்டார். அவரது கடைசிப் பதிப்பு - ஆப்டோ ன் படங்கள் அடங்கியவை

454

அபிநவ-ஸ்நாப்