கலியாணமாகாத வயதுவந்த கன்னிப்பெண்ணை வைத்துக்கொண்டு, காக்க முயலும் மாஜி சுமங்கலி அவ்வாறு நிர்விசாரமாக இருப்பாளா? அதுதான் போகட்டும்; நாளைக்கு அடுப்புமூட்ட வேண்டுமே!
வாழ்வென்ற குளத்தில் நிரந்தரக் கடன் என்ற பாசியை ஏதோ இரண்டொரு நாளாவது விலக்கும் முப்பது ரூபாயை இனி யார் வந்து போடுவார்கள். ஜட்கா வண்டிக் குதிரை மாதிரி ஓடி ஓடி உழைத்தவருக்கு நாலு பேர் சவாரி சௌகரியமாக இருக்கும். ஆனால் அவரை விட்டால் கதியில்லை என்பவருக்கு...
அந்தக் காலத்தில் ரங்கசாமி நண்பன் தான், ரொம்ப நல்லவன்; சாது. அத்தோடு அவன் மனைவியும் ரொம்ப நல்லவள், சாது. அதுமட்டுமா? விவரம் தெரியாத அழகி.
நான் அப்பொழுது அவர்கள் வீட்டுக்குப் போவேன்... அடிக்கடி.
என் குழந்தையின் வியாஜமாக நான் அங்குச் செல்லுவேன்... என் குழந்தைக்கு அவர்கள் பேரில் ரொம்பப் பிரியம். அவர்களுக்கும் அப்படித்தான்.
நான் என் நண்பனைப் பார்க்கப் போவேன். என் எண்ணம் அத்துடன் நின்றுவிடவில்லை. அது அவர்கள் இரண்டு பேருக்கும் தெரியாது. என் மனமும் விழுந்துவிட ஆரம்பித்தது. இப்பொழுது எனக்கு அவள் பேர்கூட ஞாபகமில்லை. அவ்வளவு காலமாகி விட்டது...?
ரங்கசாமி வாழ வேண்டிய இடம் சர்க்கார் ஆஸ்பத்திரி. என்னமோ தவறிப் போய் மேடைத்தெரு 9-ஆம் நம்பர் வீட்டில் குடித்தனம் நடத்தினான். அவனும் நானும் ஒரே ஆபீஸில்தான் வேலைபார்த்து வந்தோம்; அவனுக்கு முப்பது ரூபாய் சம்பளம்; எனக்கு ஐம்பது ரூபாய் சம்பளம்; எனக்குக் கால் தடுக்கினால் எங்கப்பா வைத்துவிட்டுப்போன வயல் வரப்பின் மேலாவது விழலாம்; அவன் கடன்காரன் காலடியில்தான் விழவேண்டும்; எத்தனையோ தடவை கடன்காரன் காலடியில் விழுந்திருக்கிறான்; கடன்காரனுக்குப் பின்னால் டாக்டர் எப்பொழுதும் நிற்பார்.
நான் அப்பொழுது என் குடும்பத்தை வீட்டுக்கு, ஊருக்கு அனுப்பிவிட்டிருந்தேன். என் கைச்சமையல் கசந்தால், ரங்கசாமி வீட்டுச் சாப்பாடு. அல்லது அசட்டுப் பிடித்த ஐயன்கிளப் உண்ணாவிரதம்.
இந்தச் சமயத்தில்தான் நான் ரொம்ப நெருங்கி ரங்கசாமி வீட்டில் பழக நேர்ந்தது. டாக்டர் ஏதோ லத்தீன் பெயருள்ள காய்ச்சல் என்று சொன்னார். அவனது நோய் மறுநாள் என்று எல்லையில்லாமல் நீண்டு கொண்டே போயிற்று. கிடப்பில் விழுந்துவிட்டான். மனைவி பிரசவத்திற்காகத் தாடி வளர்க்கும் ஹோட்டல் ஐயன் மாதிரி, முகம், வரவரக் குழிந்து பிரேதக்களை காட்ட ஆரம்பித்துவிட்டது. மூன்றுமாதம் அவளும் ஓயாது ஒழியாது உழைத்தாள்.....
460
விபரீத ஆசை