உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்காக்குவதுதான் அவரது தாட்சண்யமற்ற படைப்புப் பார்வை. இருப்பினும் நிறையும் குறையுமான நெல்லைதான் அவருக்கு வாழ்வின் குறியீடு. நம் கைக்கு மீறிப் போகும் ஏதோ ஒன்று நம்மீது வந்து கவியப் போகிறது என்ற கலவரம் சென்னைமீது அவருக்கு இருக்கிறது. மேற்கத்திய அறிவியல் சென்னையில்தான் நம் பண்பாட்டின் கதவை நொறுக்குகிறது என்று கற்பனை செய்துகொண்டாரோ என்னவோ. மனித உறவுகள் சிதைவது அவரைச் சங்கடப்படுத்துகிறது. ('சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போகவஸ்து' - நம்பிக்கை). அறிவியலின் ராட்சசக் குறுக்கீடுகளான எந்திரங்கள் அவரைச் சதா சீண்டிக் கொண்டிருக்கின்றன ('எக்காளச் சிரிப்பு மாதிரி எங்கோ ஒரு பக்கத்திலிருந்து டிராமின் கணகணப்பு!'-கவந்தனும் காமனும்). ரேடியோ என்பது ஒரு அதிசயப் பொருளாக இருந்த முப்பதுகளிலேயே ஒரு கதையில், 'நல்ல வேளை ரேடியோ முடிந்தபின் கடற்கரைக்குப் போனேன்' (சித்தம் போக்கு) என்று ஒரு வரி வருகிறது. இரண்டாம் உலகப்போரின் வன்முறை சென்னையை எட்டிப் பார்க்க ஆயத்தம் கொண்டபோது மக்கள் உள்ளூர அடைந்த பீதியைப் 'படபடப்பு' என்ற சித்திரத்தில் அவர் உருவகப்படுத்துகிறார். அறிவியல் பேய் பற்றிய தன் முன்கூட்டிய சந்தேகங்கள் நிஜங்களாகத் தொடங்கிவிட்டன என்று அவர் கருதியிருக்கக்கூடும்.

விபசாரக் கொடுமை பற்றி அவர் அறியாதவர் அல்ல. ஆனால் அவரும் பி. எஸ். ராமையாவும் சென்னையில் மிக மோசமான விபசாரத்தைத் தெருவில் பார்க்கிறார்கள் (மணிக்கொடி காலம், பி. எஸ். ராமையா). 'கவந்தனும் காமனும்', 'பொன்னகரம்' ஆகிய கதைகள் நம் நினைவுக்கு வருகின்றன. பிச்சைக்காரர்களின் இருப்பு அவருக்குத் தெரியும் என்றாலும் ஜனங்கள் ஏகமாக நடமாடும் நடைபாதையில் ஒரு பிச்சைக்காரன் 'சாவகாசமாகச்' செத்துக்கொண்டிருப்பது கொடுமையில் மேலும் நிகழும் ஒரு சரிவாகிவிடுகிறது (மகாமசானம்). தனக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமும் தந்த அனுபவங்களைப் படைப்புக்குள் கொண்டு போகும்போது மொழியில் ஒலமிடுபவர் அல்ல புதுமைப்பித்தன். தான் நன்கு அறிந்திருக்கும் விஷயங்களை வாசகர், தம் சுரணை கெட்டதனத்தால் இன்னும் புரிந்துகொள்ளாதிருக்கும் நிலை தன் பொறுமையைச் சோதிப்பதுபோன்ற பாவனையை அவர் பல கதைகளிலும் மேற்கொண்டிருக்கிறார். குத்தலும் கிண்டலும்தான் அவரது சொல்முறைகள். வாழ்க்கையின் அவலங்களை எண்ணிக் கதைக்குள் ஓலமிடுவது அல்ல; அனைத்து விமர்சன அதிர்வுகளையும் வாசகனின் தார்மீக ரோஷத்தைத் தூண்டும் வகையில் செலுத்திக்கொண்டிருப்பதே படைப்பாளியின் பணி. கதாபாத்திரங்களின் அவலங்களுக்காகப் படைப்பாளி நெஞ்சில் அடித்துக்கொள்ளத் தொடங்கும்போது விவேகமான வாசகன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு விலகி நிற்கிறான்.

கதாபாத்திரங்களாக வரும் பெண்களுடன் புதுமைப்பித்தன் கொண்டிருக்கும் உறவு அவர்களை இக்கட்டில் மாட்டிக்கொண்டிருக்கும் ஜீவன்களாகப் பார்க்க வைக்கிறது. இந்தப் பார்வை அவரது வழக்கமான, கறாரான பரிசீலனைகளிலிருந்து அவர்களுக்கு விலக்களிக்கிறது. அவர் பல சமயங்களில் அவர்களின் நிலையை எண்ணித் தார்மீ-

46