"அது சதிதான்; இப்பமே சொன்னாத்தானே, அவுக ஒரு வளி பண்ணுவாக!" என்று அவகாச அவசியத்தை விளக்கினாள் செல்லம்மாள். 'அவுக' என்றது கடை முதலாளிப் பிள்ளையைத்தான்.
"தீபாவளிக்கு ஒங்க பாடு கவலையில்லே; கடையிலேயிருந்து வரும்; இந்த வருஷம் எனக்கு என்னவாம்?" என்று கேட்டாள்.
"எதுவும் உனக்குப் பிடித்தமானதாப் பாத்து எடுத்துப் போட்டாப் போச்சு. மொதல்லே நீ எளுந்து தலையைத் தூக்கி உக்காரு" என்று சிரித்தார் பிரமநாயகம்.
வழி நெடுக, 'அவளுக்கு என்னத்தைப் பற்றுக் கணக்கில் எழுதிவிட்டு எடுத்துக் கொண்டு வருவது? பழைய பாக்கியே தீரவில்லையே! நாம் மேலும் மேலும் கணக்கேற்றிக் கொண்டே போனால் அநுமதிப்பார்களா?' என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே நடந்தார். கடைக்குள் நுழைந்து சோற்றுப் பொட்டணத்தையும் மேல்வேட்டியையும் அவருடைய மூலையில் வைத்தார்.
"என்னடே பெரமநாயகம், ஏன் இத்தினி நாளிய? யாரு வந்து கடையெத் தெறப்பான்னு நெனச்சுக்கிட்டே? வீட்டிலே எப்படி இருக்கு? சதி, சதி, மேலே போயி அரைப் பீசு 703 எடுத்துக்கிட்டு வா; கையோட வடக்கு மூலையிலே, பனியன் கட்டு இருக்கு பாரு, அதையும் அப்படியே தூக்கியா" என்ற முதலாளி ஆக்ஞை அவரை ஸ்தாபன இயக்கத்தில் இணைத்துவிட்டது. ஒரு கஜம், அரைக் கஜன், பட்டு, பழுக்கா, சேலம், கொள்ளேகாலம், பாப்லின், டுவில் - என்றெல்லாம் பம்பரமாக வயிற்றுக் கடவுளுக்கு லக்ஷார்ச்சனை செய்து கொண்டிருந்தார் பிரமநாயகம் பிள்ளை.
மாலை ஒன்பது மணிக்கு முதலாளிப் பிள்ளையவர்களிடம் தயங்கித் தயங்கித் தமது தேவையை எடுத்துச் சொல்லி, மாதிரி காட்டுவதற்காக மூன்று சேலைகளைப் பதிவு செய்துவிட்டு, மேல் வேட்டியில் முடிந்தவராக வீடு நோக்கி நடந்தார்.
3
நடைப்படியருகில், பிரமநாயகம் பிள்ளை வந்து மூட்டையை இறக்கிவைத்துவிட்டு, கதவுச் சந்துக்கிடையில் வழக்கம்போல விரல்களை விட்டு உள்தாழை நெகிழ்த்தினார். தெருவில், இருள் விழுங்கிய நாய் ஒன்று உறக்கக் கலக்கத்துடன் ஊளையிட்டு அழுதது. அதன் ஏக்கக் குரல் அலைமேல் அலையாக மேலோங்கி எழுந்து மங்கியது.
பிரமநாயகம் பிள்ளை கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.
வீட்டில் விளக்கில்லை. 'உறங்கி இருப்பாள். நாளியாகலே...' என நினைத்துக் கொண்டே நிலைமாடத்தில் இருந்த நெருப்புப் பெட்டியை எடுத்து அருகிலிருந்த சிமினி விளக்கை ஏற்றினார். அந்த மினுக்கட்டான் பூச்சி இருளைத் திரட்டித் திரட்டிக் காட்டியது.
புதுமைப்பித்தன் கதைகள்
513