உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம் சார்ந்து கடுமையாகிவிட்டதாலேயே உணர்ச்சியின் தளம் இங்கு உறைந்துவிட்டதாகப் படுகிறது. ஒரு உண்மையை அழுத்துவதற்காகச் சற்றுக் கோணலாகச் சொன்னால் பைலார்க்கஸ் எழுதிய கதை போல் இருக்கிறது 'சிற்பியின் நரகம்'.

செல்லம்மாள் கதையைத் தமிழ்ச் சிறுகதையின் ஒப்பற்ற சாதனை என்று சொல்லலாம். வாழ்க்கை சார்ந்த துக்கத்தின் குறியீடுபோல் அது இருக்கிறது. இது ஒரு பக்கம். மற்றொரு கோணத்தில் தமிழில் எழுதப்பட்டுள்ள காதல் கதைகளில் ஆகச் சிறப்பானதும் இதுதான். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பரஸ்பரம் எதற்கென்று தெரியாத நிலையில் நேசிப்பதுதான் காதல் என்றால் அந்தக் காதல் பிரமநாயகம் பிள்ளைக்கும் செல்லம்மாளுக்கும் கைகூடியிருக்கிறது. தமிழ் மண்ணில் இதன் சாத்தியத்தைப் புதுமைப்பித்தன் மூலம் மனதார நாம் நம்புகிறோம். காதல் கதைகள் என்ற பெயரில் நம் வாழ்வுக்கு ஒவ்வாத கணக்கற்ற ஜோடனைகளை இன்று வரையிலும் உருவாக்கியிருக்கும் சகல எழுத்தாளர்களும் இந்தக் கதையை நினைத்து மனத்துக்குள் வெட்கப்பட வேண்டும்.


நான் ஆராய்ச்சித் துறை சார்ந்தவன் அல்ல. இந்நிலையில் நவீன ஆராய்ச்சி அறிவு சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள 'புதுமைப்பித்தன் சிறு கதைகள்' என்னும் இப்பதிப்பின் சிறப்புகளை முழுமையாக மதிப்பிட எனக்குத் தெரியும் என்று தோன்றவில்லை. என்றாலும், ஆராய்ச்சி சார்ந்து ஒரு படைப்பின் செம்மையான பதிப்பை உருவாக்கும்போது அதில் சாதாரண வாசகர்களின் பயன்பாட்டுக்கு எவ்விதக் குறுக்கீடும் இருக்கக்கூடாது என்ற ஆ. இரா. வேங்கடாசலபதியின் கண்ணோட்டம் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. அத்துடன் பல கதைகளிலிருந்த குழப்பங்களையும் மூலப்பாடங்கள் சார்ந்து அவர் தீர்த்து வைத்திருக்கிறார். சலபதி என் நண்பர். அவர் இப்பதிப்பைச் சிறப்பாக உருவாக்கும் பொருட்டு எடுத்துக்கொண்ட முயற்சிகள் எனக்குத் தெரியும். மேற்கொண்ட அலைச்சல்களும் பட்ட வேதனைகளும் தெரியும். செலுத்திய உழைப்புத் தெரியும். இப்பதிப்பின் சிறப்பைத் தமிழ் உலகம் ஏற்றுக்கொள்ளும் என்றால் அது அவர் உழைப்புக்குக் கிடைத்த பரிசு. ஒரு படைப்பாளிமீது ஒரு ஆராய்ச்சியாளன் கொண்ட பெரும் மரியாதைக்கான அங்கீகாரம்.

51