ருந்தது. மீண்டும் தைலத்தைச் சற்றுத் தாராளமாகவிட்டு உடலில் தேய்த்து மயக்கம் தெளிவிக்க முயன்றுகொண்டிருந்தார்.
அச்சமயம் வெளியே ஒரு ரிக்ஷா வந்து நின்றது. "ஸார்! உள்ளே யார் இருக்கிறது?" என்று குரல் கொடுத்துக் கொண்டே கைப்பெட்டியும் வறுமையுமாக டாக்டர் உள்ளே வந்தார்.
"நல்ல சமயத்தில் வந்தீர்களையா!" என்று சொல்லிக்கொண்டே அவரை வரவேற்றார் பிரமநாயகம் பிள்ளை.
"இப்போ என்ன?" என்றபடியே அருகில் வந்து உட்கார்ந்து கையைப் பிடித்துப் பார்த்தார். வாயைத் திறக்க முயன்றார். பல் கிட்டிவிட்டிருந்தது.
"ஒரு நெருப்புப் பெட்டி இருந்தாக் கொண்டு வாருங்க; ஊசி குத்தணும்" என்றார்.
பிரமநாயகம் பிள்ளை அருகில் மாடத்தில் இருக்கும் நெருப்புப் பெட்டியை மறந்துவிட்டு அடுப்பங்கரைக்கு ஓடினார். அவரது வருகைக்காகக் காத்திருப்பதற்காக மோட்டுவளையைப் பார்க்க முயன்ற டாக்டரின் கண்களுக்கு மாடத்து நெருப்புப் பெட்டி தெரிந்தது. எடுத்து 'ஸ்பிரிட்' விளக்கை ஏற்றி மருந்து குத்தும் ஊசியை நெருப்பில் சுடவைத்துச் சுத்தப்படுத்தினார். கையில் நெருப்புப் பெட்டியுடன் அசடு வழிய வேர்வை வழிய நின்று கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளையிடம், இடது கையைச் சற்று விளக்கருகில் தூக்கிப் பிடித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, மருந்தைக் குத்தி ஏற்றினார். இரண்டொரு விநாடிகள் இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
செல்லம்மாள் சிணுங்க ஆரம்பித்தாள்.
டாக்டர் மெதுவாகத் தம்முடைய கருவிகளை எடுத்துப் பெட்டியில் வைத்தார். "கொஞ்சம் சீயக்காய்ப் பொடி இருந்தால் கொடுங்கோ" என்று கேட்டார். பிரமநாயகம் பிள்ளை வேட்டி துவைக்கும் வெள்ளைச் சவுக்காரக் கட்டியைக் கொடுக்க, மௌனமாகக் கை கழுவிவிட்டு, "தூங்குகிறாப் போலிருக்கிறது. எழுப்ப வேண்டாம். எழுந்தால் பால் மட்டும் கொடுங்கள்; இம்மாதிரிக் கேஸ்கள் வீட்டில் வைத்திருப்பது சவுகரியக் குறைச்சல் ஐயா; ஆஸ்பத்திரிதான் நல்லது" என்று கூறிக்கொண்டே பெட்டியைத் தூக்கிக் கொண்டு எழுந்து நடந்தார்.
முன் தொடர்ந்த பிள்ளை, "எப்படி இருக்கிறது?" என்று விநயமாகக் கேட்க, "இப்பொழுது ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எதற்கும் நாளை காலை வந்து என்னிடம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்; பிறகு பார்ப்போம்; இந்த ரிக்ஷாக்காரனுக்கு ஒரு நாலணா கொடுங்கள்" என்று சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறிக்கொண்டார். மடியிலிருந்த சில்லறை மனித மாட்டின் மடிக்கு மாறியது. ரிக்ஷா செல்லுவதைப் பார்த்து நின்றுவிட்டு உள்ளே திரும்பினார்.
522
செல்லம்மாள்