உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர் மூட்டைக் கதிபதி காட்டு வீரப்பன் என்ற விருதெடுத்து அண்டாண்ட புவனங்களையும் கட்டியாண்டார். கோவணாண்டிகள் குபேரபட்டணத்து வாரிசாகப் போன கதையாக நாங்கள் புகுந்து விட்டாலும், தெய்வம் கொடுத்த திருவரத்தால் நியம நிஷ்டைகள் பிறழாது, ஆசார சீலம் அகலாது வாழ்ந்துவரும் நாளில், ஒருநாள் என் கணவர் முகம் சோர்வுற்று, நலங்குலைந்து, முடுக்கில் ஒண்டிக் கிடந்ததைக் கண்ணுற்று, "மூட்டைக்கரசா, என் ஆசைக்குகந்த ஆணழகா, கவலை என்ன?" என்று கால் பிடித்துக் கேட்டேன். அதற்கு அவர், "என் பத்தினிப் பெண்ணே, அருந்ததியே, புத்திரப் பேறு வாய்க்காவிடில் நம்முடைய ராச்சியம் சீரழிந்து கெட்டுக் குட்டிச் சுவராகப் போகுமே. க்ஷேத்திராடனம் செய்வோமா, தீர்த்த விசேடம் தரிசித்து வருவோமா என்று கருதுகிறேன்" என்றார். நான் அதற்கு, "அரசே, நேற்றிரவு நான் பசியாற்றப் பவனி சென்றபோது பட்டமகிஷி, மன்னவன் தங்கபஸ்பம் உண்டதனால் உள்ள அருங்குணங்களை வர்ணித்துக் கொண்டிருந்தாள். நீர் போய், மன்னவன் துடையில் நாலு மிடறு ரத்தம் பருகிவாரும். பிறகு யோசிப்போம்" என்றேன். என் கணவரும் என் புத்திக்கும் மெச்சி, "கெட்டி கெட்டி! நீயொருத்தியே, இந்த ராச்சியத்திலே எனக்கு ஏற்பட்ட பட்டகிஷி. இனிமேல் எனக்கு மந்திரி ஏன்?" என்று என்னைக் கட்டித் தழுவிவிட்டு வெளியே சென்றார். நானும் என் வாயில் திருடிக் கொணர்ந்த சந்தனத்தைப் பூசி, வாசனையிட்டு அலங்கரித்து என் மன்மதனார் வரவுக்காக காத்திருதேன். கணப்பொழுது கழிந்ததோ இல்லையோ, என் கணவனார் பகையரசரைக் கண்ட பட்டாளம் போலும், மந்திரவாதியைக் கண்ட தந்திரப் பேய் போலும் திடுதிடு என்று ஓடிவந்தார். நானோ பதறிப் போய் என்ன என்ன என்று பயந்து அவரைக் கட்டித் தழுவிக் கொண்டேன். "பெண்ணே, என் பதுமினிக் கண்ணே! பதறாதே. பெண் புத்தி கேட்பவன் பின்புத்திக்காரன் என்று சொல்லுவார்கள். அது வாஸ்தவமாகப் போய்விட்டது. ஆனால் உன் தாலிப் பாக்கியத்தால் நான் இன்று தப்பிப் பிழைத்தேன். நீ பத்தினி என்பதற்கு இது ஒன்றே போதும். முதலில் நம் ராச்சியபாரத்துக்கு ஒரு மந்திரியை நாளை காலையிலேயே அமர்த்தி வைத்திவிட்டுத்தான் மறுகாரியம் பார்க்க வேண்டும்" என்றார். "அது கிடக்கட்டும், அரசே! நாளை விஷயம் நாளையல்லவா கவனிக்க வேண்டும். இன்னும் நாளை வர நாழிகை எத்தனையோ கிடக்கிறதே. நடந்த கதை என்ன இப்பொழுது சொல்லலாமே?" என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர், "இப்பொழுது நான் போன நேரம், சகுனப் பிழையோடு, நேரங்கெட்ட நேரமுமாகும். கண்ணை மூடிக்கொண்டு போகவேண்டியதாப் போச்சு. என்னடா கர்மகாண்டம் என்று பகவத் கீதையில் நாலு சுலோகத்தை உச்சரித்துக் கொண்டே காலிருக்கும் இடம் என்று நினைத்துக் கொண்டு உத்தேசமாகச் சென்று கடித்தேன். அது பிருஷ்ட பாகம். என்னவோ சுருக்கென்றதே என்று மன்னன் எழுந்திருக்க, நான் சற்று விலகாமற் போயிருந்தால்

புதுமைப்பித்தன் கதைகள்

545