ரத்தம் பருகுவது? என் ஆசைக் கணவர் என்னை அருந்ததி என்று அழைத்தது ஞாபகம் வர, ஓடோ டியும் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன். கற்பிழப்பது பஞ்சமாபாதகங்களில் ஒன்றல்லவா? பெண் புத்தி பின்புத்திதானே? இந்தச் சமயத்தில் அது சற்றே முன்புத்தியானது, பூர்வ ஜன்ம வாசனைதான்.
மறுநாள் காலை என் மூட்டையழகர் நியம நிஷ்டைகளை எல்லாம் முடித்துவிட்டு, எங்கள் அரண்மனை முற்றத்திலே சற்று நேரம் கொலுவீற்றிருந்தார். வெயில் 'சுள்' என்று காய்ந்து வெளி வாசலை எட்டியவுடன், வழக்கம் போல நாங்கள் எங்கள் ராச்சியத்தைப் பரிபாலனம் பண்ணிவரப் பவனி புறப்பட்டோ ம். யமன் திசையில் கொஞ்ச தூரம் போகையிலே, வாடி வதங்கித் தள்ளாடி நடந்த மூட்டைப்பூச்சி ஒன்றைக் காண, நான் சங்கோசப்பட்டு என் கணவரின் பின்புறமாக ஒதுங்கி நின்றேன். உடனே என் கணவரானவர், அட்டகாசமாக ஆரோகணித்து நின்று, "அகோ, வாரும் பிள்ளாய், தள்ளாடித் தவிக்கும் புதியவரே, உமக்கு எதிரே நிற்பவர் யார் என்று தெரிந்துகொள்ளக் கண் பொட்டையாங் காணும்! நாம் இந்த மூட்டை ராச்சியத்துக்கு மணிமுடி தரித்த மன்னவன் காணும்; காலில் விழுந்து தெண்டனிட்டு நமஸ்காரம் செய்யும். நாம் உமக்கு உயிர்பிச்சை தந்தோம்; அஞ்சாதீர்" என்றார். அதற்கு அந்தப் பரக்கழி மூட்டைப்பூச்சி, 'அக் அக்' என்று சிரித்து, "முடிமன்னரே, நீர் செங்கோல் நடத்த மருந்துக்குக்கூட பரிசனங்கள் உம் ராச்சியத்தில் கிடையாதா? நானும் நாலு நாழிகையாகச் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன்; சுஜாதி வர்க்கத்தில் ஒருத்தரையும் காணவில்லையே!" என்றது. மீசை கோபத்தில் துடித்தாலும் அடக்கிக் கொண்டு, "உம்முடைய முதல் பிழை பொறுத்தோம். பரிசனங்கள் இல்லாவிட்டால் ராச்சியம் ஆள முடியாது என்று எந்தச் சாஸ்திரத்தில் படித்தீர்? நாங்கள் ஆண்டுகொண்டிருப்பதைத்தான், இதோதான் நேரில் பார்க்கிறீரே, நமக்கு ஒரு மந்திரி தேவை. உமக்கு வேலை பார்க்க இஷ்டமா?" என்று என் கணவர் அதட்டிக் கேட்க அந்தப் பரக்கழி காலில் விழுந்து 'அபிவாதயே' சொல்லியது; அத்திரேய கோத்திரமாம்; அஷ்டசஹஸ்ரம்; நாலு சாஸ்திரமும் ஆறுவேதமும் படித்த வைதிக வித்து; ஆனால் பிரம்மசாரி. புராதன காலத்திலிருந்தே அமாத்தியத் தொழிலில் பிரக்கியாதி பெற்ற குடும்பமாம்; மந்திரி வேலையையும் போக ஒழிந்த வேளைகளில் வைதிக கர்மாக்களையும் செய்து கிடப்பதற்காக, அவனைத் திட்டம் பண்ணி அமர்த்தினார்.
காலை எழுந்தவுடன் கொலு மண்டபத்திலிருந்து என் மன்னர் செங்கோல் செலுத்துவது கண் நிறைந்த காட்சியாக இருக்கும். "அகோ வாராய் மதிமந்திரி! மாதம் மும்மாரி பெய்து வருகிறதா?" என்று கேட்பார். அமாத்திய குலதிலகமான மந்திரி சுமந்திரனும், "ஆம் அரசே, நுங்கோலே செங்கோல்" என்று தெண்டனிட்டுத் தெரிவிப்பான். பிறகு இரண்டு பேருமாய் வெளியே போய் ராச்சியத்தைப் பரிபாலனம் பண்ணிவிட்டு வருவார்கள். இப்படி வெகு காலமாக அரசாட்சி பண்ணி வந்தோம்.
புதுமைப்பித்தன் கதைகள்
547