நாங்கள் இருவரும் சயனித்துக் கண்ணயர்ந்துவிட்டோ ம். நடுச்சாமம் இருக்கும். எங்கள் கொலு மண்டபத்தில் கடல் பொங்குவது போலப் பெரிய இரைச்சல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தோம். மன்னர் அது என்னவென்று கேட்டுக்கொண்டே வெளியே போனார். நானும் தொடர்ந்து போய்க் கதவுக்குப் பின்பக்கமாக ஒதுங்கி நின்று கேட்டேன்.
எங்கள் பரிசனங்கள் எல்லாம் கூடியிருந்தார்கள். அவர்களில் மூப்பும் மொய்ம்பும் மிகுந்த அறிவாளி ஒருவர், மன்னர் முன்சாஷ்டாங்கமாகத் தெண்டனிட்டு, "மன்னாதி மன்னா, செகதலம் புகழும் மகிபதி, எங்களுக்கு உயிர்பிச்சை அருள வேண்டும்; மூட்டைக் கடி பொறுக்காமல், கட்டிலை வெந்நீரிலிட அங்கே உத்தரவாகிவிட்டது. எங்களை எப்படியாவது ரக்ஷிக்க வேணும்" என்று கெஞ்சினார்.
மந்திரிமேல் மன்னருக்குக் கோபாவேசம் பொங்கியது.
"அட அப்பாவிப் பிராமணா, அமாத்தியன் என்று சொல்லிக் கொண்டு என் ஆளுகைக்கே ஆபத்தைக் கொண்டுவந்து விட்டாயே! பரிசனங்கள் இல்லாத காலத்தில் நாங்கள் சந்தோஷமாக ராச்சியபாரம் பண்ணவில்லையா? இப்பொழுது இவர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்து கொல்லப் போவதும் அல்லாமல், எனக்கும் என் பத்தினிக்கும் பிராணபத்தைக் கொண்டுவந்துவிட்டாயே. நாட்டைவிட்டு ஓடிய ராசனைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? வா, போய் ஒற்று விசாரித்து வருவோம்" என்று அவரையும் அழைத்துச் சென்றார்.
விக்கிரமார்க்க மகிபதியே, அவரைக் கடைசியில் உயிரோடு பார்த்தது அதுவே. மன்னர் மன்னவா! எனக்குத் தாலிப் பிச்சை தரவேண்டும். அவருடைய உடல் நசுங்கிக் கிடந்தது இன்னும் என் கண்முன் நிற்கிறதே, தெய்வமே! அவர் உயிரைக் கொடும். அல்லது நான் உமது ஈட்டியில் கழுவேறி உயிரை மாய்த்துக் கொள்ளுவேன் என்று அந்த மூட்டை பத்தினியானது விக்கிரமார்க்க ராசனுடைய ஈட்டி முனைமேல் ஓடி ஏறி நின்று, தன் உடல் போதுமான கனமில்லாமையால் உயிர்விட முடியாமல் தவிக்க, மன்னர் மன்னவனும் அதற்கு அபயம் அளித்து, "பெண்ணே, பயப்படாதே; நாங்கள் இப்பொழுதுதான் காடாறு மாதம் தொடங்கியிருக்கிறோம்; உன் புருஷன் உயிரை மீட்டுத் தருகிறோம்" என்று உத்தாரம் கொடுத்து விட்டு, மன்னர் மன்னவன் பட்டியைப் பார்த்து, "வாரும் பிள்ளாய், நும் யோசனை என்ன? கூடுவிட்டுக் கூடுபாய்ந்து காரியம் கூட்டுவோமா அல்லது மந்திரவாள் எடுத்துக் கதையை முடிப்போமா?" என்று கேட்க, அதற்குப் பட்டியானவன் தெண்டனிட்டு வணங்கி, "சமுகத்திற்குத் தெரியாததை நான் என்ன புதிதாகச் சொல்லப் போகிறேன்? மோசம் செய்த தாசிப் பெண்ணைக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்துதானே பரிசு கொடுத்தோம்? மற்றும் மந்திரவாளைத்தான் இரண்டு முறை உபயோகித்துவிட்டோமே; ஒரே ஒரு செப்பிடு
புதுமைப்பித்தன் கதைகள்
549