உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவசிதம்பர சேவுகம்


தாடி வளர்த்தால் ஞானம் ஏற்பட்டாலும் ஏற்படும். முகவாய்க் கட்டையில் பேன் பற்றினாலும் பற்றும். சிவசிதம்பரம் பிள்ளைக்கு பேன் பிடிக்கவில்லை. ஆனால் மேற்கு ரத வீதி வர்த்தகர்கள் அவரை சாமி, சாமி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். கழுத்துப்பிடரி வரை வளர்ந்த சிகை; அதாவது அள்ளிச் சொருகி, நிலைகுலைந்து தவழும் சிகை; நரையோடி நெஞ்சை மறைக்கும் தாடி; கண்ணுக்கு மேல் பார்த்து சாரம் கட்டிவிட்ட மாதிரி புருவம்; மல் வேஷ்டி, சிட்டி துண்டு, ஐந்து பெண்கள், பதினைந்து ரூபா சம்பளம், கல்லத்தி முடுக்குத் தெருவில் வறுமையில் இருளடித்த 'கர்ப்பக்கிருகம்' - இவர்தான் சாமி சிவசிதம்பரம் பிள்ளை. லேயன்னா மேனா வீனா ஜவுளிக் கடையில் அவருக்கு சேவகம். பட்டணத்திலே அந்தக் காலத்தில் குண்டு விழுந்தபோது, முறிந்து மூடிய ஜவுளிக்கடை ஒன்றின் 'ஸ்பிளின்டர்ஸ்களாக' திருநெல்வேலி மேற்கு ரத வீதியில் வந்து விழுந்தார். அன்று விழுந்த இந்தச் சதைப்பிண்டம் இன்றும் நாடியின் தாள அமைதி குன்றாமல் அடித்துக் கொண்டிருக்கிறது. அவர் மாறியது கிடையாது. அவரது குடும்பமும் மாறியது கிடையாது. அவருடைய சேவகமும் மாறியது கிடையாது. அவர் வந்தபோது லேயன்னா இருந்தார்; தாமிரவருணி ஆற்றில் பெருவெள்ளம் வந்து பையன்களைப் பரீட்சைக்குப் போகவிடாதபடியடித்து, ஊழியின் இறுதிக் காலத்தைக் கோடு போட்டுக் காட்டியபோது மேயன்னா இருந்தார்; சற்றுக் கண் விழித்து எழுந்த விராட புருஷன் எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்த மாதிரி வந்த 1930-ம் வருஷ உப்பு யுகம் வந்த போது வீயன்னா இருந்தார். இப்பொழுது இம்மூன்றும் கலந்து தேசத்தை நெருக்கிய போது, விலாச முதலாளிகளின் புதல்வர்கள் பெயரால் கடை நடந்து கொண்டிருந்தது. முறையே மூத்த மக்கள் மூவரும் தம்முள் அத்தான் மைத்துனர்களாகி விட்டார்கள். அவர்கள்தானிருந்து கடையை நடத்துகிறார்கள். மற்றவர்கள், லேயன்னாவுக்கு இவர் தவிர ஒரு மகனும், மற்றும் இருவருக்கும் முறையே இரண்டிரண்டு பேரும் உண்டு. இவர்கள் சர்க்கார் முதல் மார்வாடி சேட் மாவுத் தொழிற்சாலை வரையுள்ள பெரிய வர்த்தக ஸ்தாபனங்களில் சேவகத் தொழில் செய்து கொண்டிருந்தார்கள். எப்போதோ ஒரு

புதுமைப்பித்தன் கதைகள்

591