உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சற்று நேரங்கழித்து இலைகள் தானாக விலகின. அதனடியிலிருந்து விழுந்தது ஒரு எலும்புக் கூடு.

ஸித்த புருஷர் ஏதோ துரட்டி போன்ற ஆயுதத்தைக் கொண்டு அதை மரத்தினடியிலிருந்து இழுத்துப் போட்டார். எலும்புகள் பற்று விடாமல் பூட்டோ டு அப்படியே வந்தன. வேறு இரண்டு நந்திகள் வந்து எலும்புக் கூட்டைத் தூக்கிச் சென்றார்கள்.

"இங்கே பிரபஞ்ச நியதிப்படி பிரஜோற்பத்தி கிடையாது. அதனால் ஒவ்வொரு எலும்புக் கூடும் அத்யாவசியம்" என்றார் ஸித்த புருஷர்.

இவர் என்ன, நம்மைப் பசிக்கிறதா என்று கேட்டுவிட்டு வீண்கதை பேசுகிறார் என்று நினைத்தேன். எதிரிலிருந்த மரம் எருமை முக்காரம் போடுவதுபோலக் கனைத்தது! சில மரங்களில் அதன் பால் நாளங்கள் வழியாக வேகமாக ஓடும் போது கனைக்கும் சப்தம் கேட்கும் எனப் படித்திருக்கிறேன். நரமாம்ச பட்சணியான இந்த மரமும் அப்படித்தான் போலும்.

ஸித்த புருஷர் அருகில் இருந்த அம்பு ஒன்றை எடுத்து வீசினார். வெறும் சதைப்பற்றில் பாய்வது போல புகுந்தது.

அம்புடன் தொடுக்கப்பட்டிருந்த கயிற்றின் வழியாக அதன் பால் வழிந்து ஓடிவந்து ஒரு பாத்திரத்தை நிறைத்தது. பாத்திரம் நிறைந்ததும் மரத்திலிருந்து அம்பை உருவினார். கொப்புளித்து வந்த பால் சற்று நேரத்தில் காய்ந்து மரத்தோடு மரமாகிவிட்டது.

பாலை எடுத்து என்னிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். மனிதனைத் தின்ன மரத்தின் பாலையா சாப்பிடுவது!

நான் விழித்தேன்.

"சுடுகாட்டு மாமரத்துப் பழம் தின்பது என்றால் விரசமாகத் தெரியவில்லையே? சாப்பிட்டுத்தான் பாரேன் எப்படி இருக்கிறது என்று" என ஸித்த புருஷர் சிரித்தார்.

நானும் எடுத்துப் பருகினேன். பசி களைப்பு எல்லாம் பஞ்சாய்ப் பறந்து உடம்பிலே புதிய சக்தியும் தெம்பும் உண்டாயின. "இதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சாக்காடு இல்லை" என்றார்.

"கடல் கொண்ட கோவிலில் உள்ள கன்னி யார்?" என்றேன்.

"அவளா! அந்தக் காலத்தில் உனக்கு வாழ்க்கைப்பட வேண்டியவள். பூசாரி சடையன் மகள். இன்று காவல் தெய்வம்" என்றார் ஸித்த புருஷர்.

"ஞாலத்தில் யாத்திரை செய்வது போல காலத்திலும் யாத்திரை செய்து பார்க்கப் பிரியமா?" என்று கேட்டார்.

"அது எப்படி முடியும்?" என்று கேட்டேன்.


புதுமைப்பித்தன் கதைகள்

639