உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருந்தது. இந்த எரிமலை இருக்கிறதே, அது அந்தக் காலத்தில் கிடையாது. பனிக்கட்டிகள் மூடிய பெரும் மலைகள் இந்த இடமெல்லாம். இதற்குத் தெற்கே அகண்டமான பெரியதொரு நிலப்பரப்பு இருந்தது. அதில்தான் உன்னுடைய மூதாதைகளும் என்னுடைய மூதாதைகளும் வாழ்ந்து வந்தார்கள். இந்த மலையிலிருந்து புறப்பட்டு இரண்டு நதிகள் ஓடின. ஒன்று குமரியாறு. அது கிழக்கே கடலில் சங்கமமாயிற்று. மற்றது பல்துளியாறு என்பது. அது இங்கிருந்து புறப்பட்டு ஏழு பாலைவனங்களைக் கடந்து ஏழ்பனை நாட்டின் வழியாக ஈசனை வலம் வந்து மறுபடியும் தென் திசை நோக்கியோடி, பனிக்கடலுள் மறைந்தது. பனி வரையில் பிறந்து பனிக்கடலில் புகுந்தது பல்துளியாறு. குமரி நதி கீழ்த்திசைக் கடலில் சங்கமாகுமிடத்தில்தான் தென்மதுரை இருந்தது. அதில்தான் பாண்டியர்கள் மீன் கொடியேற்றி மீனவனை வழிபட்டார்கள். அவர்கள் குலதெய்வம் மீன்கண்ணி. படைப்புக் காலந்தொட்டே வழிபட்டுவரும் சிலை அது. அதற்குப் பூசனை நடத்தி வந்தவள் கன்னி. படைப்புக் காலந்தொட்டு ஜீவித்து வருகிறாள் அவள். உன்னைப் போல உன் வயசிலிருக்கும் போதும் அவளைக் கண்டேன். எனக்கு முந்தியோரும் அவளை அப்படியே கண்டு வந்திருக்கிறார்களாம். மீன்கண்ணியின் ஆலயம் ஆதியில் தென்மதுரையில் இருந்தது. நீரிலே நெருப்புத் தோன்ற தென்மதுரை அழிந்தது. நிலப்பரப்பு குன்றியது. பிறகு மீன்கண்ணியின் சிலை, அதே சிலை கபாடபுரத்தில் ஈசனார் திருவடி நிழலிலே பிரதிஷ்டை செய்யப்பட்டது. கபாடபுரத்தை நிரூபித்ததும் அங்கு குடியேறியதும் வேலெறிந்த பாண்டியன் காலத்திலாகும்... கபாடபுரம் நிலப்பரப்பின் மையத்திலிருந்தது. மீண்டும் கடற்கோள். கடல் மீண்டும் நகரின் ஒரு பாரிசத்தைத் தொட்டது. அந்த நிலையில்தான் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் சிம்மாசனமேறினான். அதன் பிறகு... மறுபடியும் மறுபடியும் சமுத்திர ராஜன் சீற்றங்கொண்டான்... கபாடபுரம் தென்மதுரை போல மூழ்கி மறைந்தது..."

ஸித்த புருஷர் பேசி நிறுத்தினார். நாங்கள் இருவரும் மவுனமாக இருந்தோம்.

எனது பார்வை இடையறாது சுழன்றுவரும் ரசக்கோளத்தின் மீது கவிந்தது. அதன் சுழற்சி நிதானமாக ஒரே வேகத்தில் வெளிச்சத்தைப் பிரதிபலித்தது...

4

கபாடபுரத்தின் அழிவு

நான் உற்றுக் கவனித்துக்கொண்டே இருந்தேன். சற்று சித்தம் கிறங்கியது. உடம்பிலிருந்து சுழன்ற புத்தி மட்டும் எங்கோ விரைந்து சென்றது. வேகத்தில் செல்லும் திசை தெரியவில்லை. நேரம் தெரியவில்லை. எதிரே பெரும் பாலைவனம் தெரிந்தது. என்ன சூடு என நினைப்பதற்குள் அவற்றை விட்டு அகன்று விட்டேன்.


புதுமைப்பித்தன் கதைகள்

643