நினைத்தான் அரிமர்த்தனன். என்ன அசட்டுத்தனமான நினைப்பு! அவன் துருஷ்கனா, யவனனா, சோனகனா? கண்களிலேதான் அம்மம்ம, என்ன பயங்கரம்! சாட்டையைக்கொண்டு சிமிட்டாக் கொடுக்கிறான். அத்தனை குதிரைகளும் அணிவகுத்து நிற்கின்றன!
"பெற்றுக்கொண்டு சீட்டைக் கொடும்; போகவேண்டிய வழி கணக்கில் அடங்காது" என்கிறான் குதிரைப் பாகன். குரலில் இனிமையும் பயங்கரமும் கலந்திருந்தன.
அரசன் முறிச்சீட்டில் கையெழுத்திட்டுத் தருகிறான். பாகன் வாங்கிக் கொண்டு வணக்கங்கூடச் செய்யாமல் போய்விடுகிறான்.
மன்னனும் மந்திரிப் பிரதானிகளும் பட்டிமண்டபத்துக்குள் திரும்ப வருகிறார்கள். வாதவூரன் முகத்தில் சோகம் தேங்க, "நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே, வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்" என்று தழுதழுத்தபடி உருகி நிற்கிறார்.
"வாதவூரரே, என்னை மன்னிக்க வேண்டும்; நான் ராஜ்யத்தைச் சுமக்கிறவன்." "அரசே, நான் உலகின் துயரத்தை, வேதனையைச் சுமக்கிறவன்."
"வாதவூரரே, அப்படி மனம் நொந்துகொள்ளக் கூடாது. தாங்கள் பழையபடி எனக்கு அமைச்சராகவே இருக்க வேண்டும்; தாங்கள் இல்லாவிட்டால் இத்தனை குதிரைகள் கிடைக்குமா?"
"அமைச்சன் மருத்துவனைப் போல இருக்கவேணும் என்பதை நான் தங்களுக்குச் சொல்ல வேண்டுமா?" என்கிறார் ருத்திரசாத்தனார்.
"பகையை விரட்டப் படைப்பலம் வேண்டாமா?" என்கிறார் ஏனாதி.
அரிமர்த்தனன் மனசு மறுபடியும் அந்தக் குதிரைகள் மீது, அந்த வெள்ளைக் குதிரைகள் மீது சவாரி செய்கின்றன. பகைவர்கள் தலைமீது நடமிடும் குதிரைகள். வாதவூரன் கொடுத்த குதிரைகள் அல்லவா? என்ன அறிவு, என்ன தூய்மை! தெய்வாம்சமாக, தெய்வமாகக் குதிரைப் பாகனைப் போலவே நின்றானே...
நடுச்சாமத்தைப் புள்ளியிடச் சங்கு விம்முகிறது, அலறுகிறது, முழங்குகிறது. அதன் ஓசையும் மடிகிறது.
அது என்ன சத்தம், தனி நரி ஊளையிடுகிற மாதிரி! அதன் குரல் ஒடுங்கும் சமயத்தில் ஆயிரம் ஆயிரமாக நரிகள் ஊளையிடுகின்றன. நான்மாடக்கூடலில் நரிகளா? குதிரைப்பந்தி இருக்கும் திசையிலிருந்து அல்லவா கேட்கிறது! அரிமர்த்தனன் எழுந்து நிலாமுற்றத்துக்குச் செல்லுகிறான். காதுகளை ஈட்டியிட்டுக் குடைவது போன்ற இரைச்சல். இருட்டில் கண்கள் துழாவுகின்றன. இருட்டைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.
புதுமைப்பித்தன் கதைகள்
649