உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாசித்ததும் பரவசமடைந்தார் எங்கள் ஆசிரியர். சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்துவிட்டார். அவரது அகக்கண் முன்னே ஒரு பெரிய நாடகம் நடைபெறுகின்றதென்பதை நாங்கள் அறிந்தோம். "எனது வாழ்க்கையில் என் கண்ணால் கண்ட, என் நண்பரொருவர் அனுபவித்த காதலின் நிகழ்ச்சியொன்றுள்ளது. அதை செவியுற்ற எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. இந்நாடகத்தை வாசிக்கும் பொழுது அச்சம்பவம் என் நினைவுக்கு வந்தது. இன்று நேரமாகி விட்டதால் நாளைக்குச் சொல்லுகிறேன். இருந்து எல்லோரும் கேட்பதாயிருந்தால் எனக்கு ஆக்ஷேபணையில்லை" என்று மறுபடியும் தன்னைச் சரிபடுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

மாணவர்கள் எல்லோரும் கேட்க ஆவலுள்ளவர்களாகயிருந்தார்களென்பதை அறிந்த கோமதிநாயகம் பிள்ளை கதையை ஆரம்பித்தார்.

2

"சிவந்திப்பட்டி தமிழ்மணங்கமழும் பொருணையாற்றங்கரை மேலுள்ள ஒரு குக்கிராமம். முந்நூறு வீடுகளுக்கு மேல் இருக்காது. கிராமவாசிகள் எல்லோருமே ஹிந்துக்கள். புராதனமான பாண்டிய அரசனால் கட்டப்பட்ட கோவில் ஒன்று இருக்கிறது. தமிழர் நாகரிகத்தையும், சிற்பத் திறமையையும் காட்டக்கூடிய கற்சிலைகள் பல உள. சிரங்களாலாய மலையைக் கரங்களில் தாங்கி நடனம் புரியும் வீரபத்திரனுடைய சிலையைப் பார்த்த எவருமே மறக்க முடியாது. அதிகம் சொல்வானேன்? இயற்கையெழில் அனைத்தும் செயற்கையழகு முழுவதும் படைத்த ஒரு கிராமம்.

"இராமலிங்கம் பிள்ளை அக்கிராமத்தின் பண்ணையார்; பெருநிதி படைத்த பிரபு. அவருடைய குமாரன் தான் எனது நண்பன்; நான் சொல்லப்போகும் சம்பவத்தின் முக்கிய கதாநாயகன். நானும் பூர்ணலிங்கமும் கலாசாலை நண்பர்கள். எங்கள் இருவருக்கும் ஒருவர்மேல் ஒருவருக்கிருந்த வாத்ஸல்யம் வேறு எந்த இரண்டு நண்பர்களிடத்திலும் நான் பார்த்ததில்லை. பூர்ணலிங்கம் கலாசாலையில் பல துறைகளிலும் பிரகாசித்தான். சீரிய நடையும் உயரிய நோக்கமும் கொண்டவன். கூர்மையான அறிவும் நேர்மையான கொள்கையும் படைத்தவன்; ஒரு சுந்தர புருஷன்.

"கலாசாலை முடிந்து கோடை விடுமுறைக்கு மாணவர்களும் மாணவிகளும் தத்தம் ஊருக்குப் பிரயாணமாயினர். நான் சென்னையில் எங்கள் மாமா வீட்டில் சில தினங்கள் தங்கிவிட்டுப் போகலாம் என நினைத்து பூரணலிங்கத்தை வழியனுப்பிவிட்டு சென்னையில் தங்கிவிட்டேன். சிவந்திப்பட்டிக்கு வருவதாக என் நண்பனிடம் வாக்களித்தேன். நான் கூடப் பிரயாணம் செய்யாமல் தனிமையாக (ஆனால் மற்ற நண்பர்களுடன் மட்டும்) பிரயாணம் செய்வது அவனுக்கு உற்சாகமூட்டவில்லை. இருந்தாலும் எனது மாமனாரின் மனவிருப்பத்தை எதிர்க்கக் கூடாது என்ற காரணத்தினாலேயே நாங்கள் இருவரும் ஒன்றாகப் போக முடியவில்லை.

682

'இந்தப் பாவி'