அரும்பு மீசையாக்கும் முயற்சி. வர்ணம் பூசிய வெள்ளைக்காரச்சி உதடுபோல் சிவப்பேறிய உதடு. நீளக் கிராப்பு - சீவாமல் பேணாமல் இருந்தால் அகில இந்திய பேன் காங்கிரஸ் கூடுவதற்கேற்ற இடவசதி. கழுத்திலே மனதின் 'பெட்டைத்தனத்தை'க் காட்டும் மெல்லிய தங்கச் சங்கிலி. இங்கிலீஷ் ட்வில் ஷர்ட்; கழுதை பொதி சுமந்த மாதிரி பாத் டவல் அலங்காரம். இடையில் நிர்வாணமில்லை என்பதை உய்விக்க வேஷ்டி. காலில் பெட்டைமாறி சிலிப்பர். Second rate cinema actor cum saloon - barber appearance.
இப்படியாக அலங்காராதிகளுடன் 'ரோந்து' வந்துகொண்டிருக்கும் வாலிபன் கண்கள், சட்டக்காரச்சியைக் கண்டால் பயத்தில் கண்களைத் திருப்பிக்கொள்ளுவதும், தமிழச்சியைக் கண்டால் field glass lens மாதிரி கண்களைத் திறப்பதுமாகக் காலங்கழிக்கிறான். கிராமப் புறத்து பயம். இவன் கண்களுக்கு மரகதம் தென்பட்டாள்.
வகிடு எடுக்க ஜன்னல் பக்கம் வெளிச்சத்திற்காக நின்றால், தன் பிரத்தியேகக் கண்களுக்கு என்று நினைத்துவிட்டான் இந்த மன்மதன். நிர்ப்பயமாக மச்சில் உடை மாற்றிக்கொள்ளுபவளுக்கு கீழே ஒரு ஜோடிக் கண்கள் தெறிகெட்டு வெறித்துக்கொண்டு ஏறச் சொருகுகின்றன என்பது தெரியாது. இவன் தனக்காகவே இந்தப் பிரத்தியேகக் காட்சிகள் என்று முடிவு கட்டி 'சந்தர்ப்பத்திற்காக'க் காத்திருக்கிறான்.
சந்தர்ப்பம் வந்து சேருகிறது.
சுந்தரவடிவேலு வேலை முடிந்துவிட்டதால் பட்டியல்களுடன் பரீட்சை போர்டுக்குப் புறப்படுகிறார்.
வேலைக்காரனுக்குத் தெரியுமா மார்க் பட்டியல் போய்விட்டது என்று? எஜமானியம்மாள் வீட்டுக்குள் இருக்கும் சமயம் பார்த்து முன் வாசல் கதவைத் திறந்து வைத்து விடுவதாகவும் ஓசைப்படாமல் போய் 'மார்க்' பார்த்துக்கொண்டு திரும்பிவிட வேண்டும் என்றும் ஏற்பாடு செய்கிறான்.
வேலைக்காரன் மெதுவாகக் கதவைத் திறந்துவைத்துவிட்டுப் போய் தெருக்கோடியில் நிற்கும் பையனிடம் சொல்லிவிட்டுப் போய் விடுகிறான். 'சந்தர்ப்பம்' வந்துவிட்டது. எப்படி உபயோகப்படுத்திக் கொள்ளுவது என்ற பிரச்னையாகிவிட்டது. எப்படி இருந்தாலும் மோட்டாரும் கீட்டாரும் வைத்த புரொபஸர் அல்லவா?
குஞ்சு தனியாகத் தனக்குத் தானே விளையாட்டுக் காட்டிக் கொண்டு பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கிறது. சிறிது தூரத்தில் ஒரு பீடிங் பாட்டில் பால்; அந்தக் கயிறு கட்டிய ரயில் என்ஜின் கேட் குத்துக்கல் போல் இருக்கிறது.
குழந்தை, வட்டு விளையாடுகிறது. "நீதான் தோத்தே!" என்று யாரையோ சொல்லிக்கொண்டு மறுபடியும் தன் ஆட்டத்தை ஆடுகிறது.
குழந்தைக்கு நொண்டியடிக்க வரவில்லை. நொண்டியடிப்பது போல காலை உயர்த்திவிட்டு கடகடவென்று ஓடி நின்று காலைத் தூக்கிக்கொள்கிறது.
புதுமைப்பித்தன் கதைகள்
695