நெஞ்சைத் தடவுகிறார். என்னென்னமோ... செய்கிறார் சிறிது மயங்குகிறது.
படுக்கவைத்து நெற்றியில் கைக்குட்டையை எடுத்துப் போடுகிறார். விக்கிக்கொண்டே கிடந்த குழந்தை, "பூனை வேண்டாம்மா!" எனக் கத்துகிறது.
"குஞ்சம்மா பூனெ ஓடியே போச்சே, அதெ அடி அடின்னு அடிச்சுப் போட்டேன். வரவே வராது" என்கிறார்.
குழந்தை மனதில் அவர் வார்த்தை பதியவில்லை.
படுக்க வைத்துக்கொண்டு நெற்றியில் ஜலத்தை நனைத்துப் போடுகிறார்; நெஞ்சைத் தடவுகிறார் - பயம் ஓயவில்லை.
"பூனெ வேண்டாம்மா!" என்ற ஒரே வார்த்தையைக் கத்துகிறது.
மரகதம் கையைப் பிசைந்துகொண்டு கண் கலங்க வாசலடியில் நிற்கிறாள். அவளை அவர் ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை.
குழந்தையைக் கொஞ்சம் அமரவைத்துவிட்டு டெலிபோனுக்குச் செல்லுகிறார்.
எண்களைத் திருப்புகிறார். "ஹல்லோ... கிருஷ்ணசாமிதானே பேசறது? நான்தான் சுந்தரம் ... குஞ்சத்துக்கு ஹிஸ்டீரியா மாதிரி கத்துறா; பயந்திருக்கா; intense terror.. ஏதும் sleeping dose கொண்டாந்தாத் தேவலே இப்பொவே வா - சில்றனெப் பார்த்துக் கொள்ள ஆள் வேணும்னு கலியாணம் பண்ணிக்கப்போய் மூணு கொழந்தைகளாச்சு, அப்றம் ரெண்டாச்சு..." என்று கூறிவிட்டு டெலிபோனைக் கீழே வைக்கிறார்.
இப்படியாகக் குழந்தை குஞ்சுவுக்கு அதிர்ச்சியால் ஏற்பட்ட ஜூரம் தெளிய மூன்று நாட்களாகின்றன.
மூன்று நாட்களும் குழந்தையின் பணிவிடையிலேயே செலவிடுகிறார் சுந்தரவடிவேலு.
மூன்று நாட்களும் மரகதத்துடன் சிரித்துப் பேசுவது, ஏன் சாதாரணமாகப் பேசுவதே நின்றுவிட்டது. அவள் இல்லாதது போலவே நடக்க ஆரம்பித்துவிட்டார்.
கண்ணீருடன் கைகளைப் பிசைந்துகொண்டு தலைவிரி கோலமாய் நின்றதுதான் மரகதத்திற்கு மிச்சம். காப்பி கொண்டுவந்தால் வாங்குவார்; சாப்பிடுவார். உணவு கொண்டுவந்தால் உண்பார். 'போதும்'. 'வேண்டாம்' என்பதுடன் அச்சமயங்களில் பேச்சு நின்றுவிடும். அவரது இந்த நிலையையும் உறுதியையும் கண்டு பயந்துவிட்டாள் மரகதம். மன்னிப்புக் கேட்டுக் காலில் விழுவதற்குக்கூட அஞ்சினாள்.
அச்சம் சீற்றமாக மாறியது. சமரச முயற்சி நின்றது. வருவதும் பணிவிடை செய்வதும் நின்றது.
வீட்டில் மறுபடியும் சமையல்காரன் சமையல் செய்யத் தொடங்கினான். அவன் காப்பி கொண்டு வருவான், குழந்தைக்குப் பால் கொண்டு வருவான். வேலைக்காரனும் இருந்தான்.
புதுமைப்பித்தன் கதைகள்
703