உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு கவளத்தை வாயில் போடுவதற்குத் தலையை அண்ணாந்த நாடோடி குழந்தையின் பீதியை உணர்ந்துவிட்டான். கவளத்தைத் திருவோட்டில் கரைத்துவிட்டு, "இல்லம்மா பாப்பா, நான் பூச்சாண்டியில்லே! பயப்படாதே...!" எனச் சிரிக்கிறான்.

குழந்தை அப்படியே நிற்கிறது.

"இதோ பாரு, இது தாடி, வெறும் மசிரு. பயப்படாதேம்மா, இங்கே வாம்மா, கண்ணு என் கண்ணுல்லே..."

குழந்தைக்குப் பயம் இவனது பரிவால் சிறிது தெளிகிறது. ஆனால் இடம் பெயர, கால்கள் சுவாதீனப்படவில்லை.

"அப்பொ நீ பூச்சாண்டியில்லே...?" என சந்தேகத்தோடு வினவுகிறது.

"இல்லெம்மா! நீதான் இப்படி வந்து தொட்டுப் பாரேன்...."

"நெசமா,சத்தியமா, சத்தியமா, சத்தியமா"

"நீ இங்கே வாடி .. கண்ணு ..." என மறுபடியும் அழைக்கிறான்.

குழந்தை மெதுவாக அவன் கிட்டப்போய் நின்றுகொண்டு அவன் தாடியை இழுத்துப் பார்க்கிறது.

"பாத்தியா வெறும் மசிரு; ஒந்தலைலே இருக்கு பாரு, அது மாதிரி" என்று அதன் தலையைத் தடவிக்கொடுத்துக்கொண்டே பக்கத்தில் உட்காரவைத்துக் கொள்ளுகிறான்.

"கண்ணு பயந்தே பூட்டாளே!” என்று குழந்தையின் நெஞ்சைத் தடவிக்கொடுக்கிறான். "கண்ணு பயப்படாதம்மா; இந்தா இங்க பாரு நான் சாப்பிடட்டா!" என்று குழந்தையை ஒரு கையால் அரவணைத்தபடி ஒரு கவளத்தை எடுத்து அண்ணாந்து வாயில் போட்டுக்கொள்ளுகிறான். குழந்தையின் கண்கள் கவளங்களுடன் அவன் வாய்க்கும் திருவோட்டுக்குமாக யாத்திரை செய்கின்றன. தலையை நீட்டி, நீட்டிப் பார்க்கிறது.

ஒரு மிளகாய் வற்றலை எடுத்துக் கடித்துக்கொள்ளுகிறான். குழந்தை அதைக் கவனிக்கிறது.

"எரிக்கலே!" என ஆச்சரியத்துடன் கேட்கிறது.

"இந்தக் கட்டைக்கி இதெல்லாம் எரிக்காது அம்மா" எனச் சிரிக்கிறான்.

"எனக்கும் பசிக்கிது" என்கிறது குழந்தை.

"பாப்பா, இன்னுமா சாப்பிடலே, ரொம்ப நேரமாச்சே!" என அவன் கூறுவதற்குள், ஓடிப்போய்க் கதவருகில் வைத்திருந்த பாட்டில், புஸ்தகம், என்ஜின் வகையராக்களை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறது. அவன் எதிரில் உட்கார்ந்துகொண்டு, பாலைக் குடிக்கிறது.

குழந்தையின செயல்களைக் கவனித்துக்கொண்ட நாடோடி ஒருவிதமாக, ஆனால் சிறிது தவறுதலாக ஊகித்துக்கொள்ளுகிறான். வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் கிடையாது, ஆண் போஷணையில் மட்டும் வளரும் குழந்தை என நினைக்கிறான்.

708

சிற்றன்னை