உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"எதிர்வாதம் பண்ணாதே; கலெக்டர்வாள் சொல்லுகிறதுதான் சரி" என்று ஒரு போடு போட்டார் பெருமாள் பிள்ளை.

தகப்பனார் ஏன் இப்படி வியவகார நியாயத்தையும் உதறித் தள்ளி விட்டு கலெக்டர் கட்சியைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். இப்படி உத்தியோகம் பார்க்காவிட்டால் என்ன. இவர் இந்த அழகில், உலக சித்தாந்தங்களின் சரித்திரத்தை எப்படி நடுநிலைமையோடு நின்று அடித்துப் பேசப் போகிறார் என்று எண்ணினான் சுப்பிரமணியம்.

"சுப்பிரமணியத்தை முதலில் என் பெர்ஸனல் (சொந்த) குமாஸ்தாவாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன். வந்திருந்துகொண்டு டெஸ்ட் எதுவும் பாஸ் செய்தால் போகிறது" என்றார் கலெக்டர்.

"ரொம்ப தாங்ஸ்" என்றார் பெருமாள் பிள்ளை.

"என்ன சுப்பிரமணியம்; திருப்திதானே."

"என்ன! எனக்கா? அதை யோசித்து சொல்ல வேண்டும்" என்றான் சுப்பிரமணியம்.

"முட்டாள்" என்றார் கலெக்டர்.

"நாளை முதற்கொண்டு வேண்டுமானாலும் அவனை அனுப்பி வைக்கிறேன்" என்றார் பெருமாள் பிள்ளை.

"நான் எழுதுகிறேன். நாளைக்கு முதல் ஜில்லா முழுவதும் முகாம் போகப் போகிறேன். அவசரம் ஒன்றுமில்லை. மிஸ்டர் பெருமாள். உங்கள் புஸ்தகத்தைப் படிக்க ரொம்ப ஆசை. அச்சடித்ததும் முதல் காப்பி எனக்கு அனுப்புங்கள்" என்றார் கலெக்டர்

பெருமாள் பிள்ளைக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. கலெக்டராகப் பார்த்து தம் புஸ்தகத்தை, அதிலும் எழுதாத புஸ்தகத்தைப் பற்றி ஆசைப்படுவதைக் கண்டு ஒரே பரவசம்.

சுப்பிரமணியனுக்கு கலெக்டர் ஏளனம் பண்ணுகிற மாதிரி பட்டது. இந்தியாவில் ஏதாவது ஒரு மூலையில் இருபது வருஷம் ஜபர்தஸ்து பண்ணிவிட்டு சீமைக்குப் போனதும் கன்னாபின்னா வென்று எழுதுவதற்கு வெள்ளைகாரருக்கு மட்டும்தான் தனிப்பட்ட உரிமையோ என்று மனசு கேள்வி கேட்டது. தகப்பனாருடைய புஸ்தகத்தை பழிக்கு பழி என்று மட்டும் ஒப்புக்கொள்ள அவனுக்கு மனம் வரவில்லை என்றாலும், பழிக்குப் பழியாகவே ஏன் இருக்கக் கூடாது என்று அவனுடைய மனசு பிடிவாதம் பண்ணியது.

கலெக்டர் மேஜையிலிருந்த மணியை அடித்தார். முருகன் வந்து நின்றான்.

"டீ கொண்டு வரச் சொல்லட்டுமா?" என்றார் கலெக்டர்.

"நான் இப்போது வைதீகமாகிவிட்டேன்; ஓரிடத்திலும் சாப்பிடுவ தில்லை; மன்னிக்க வேண்டும்" என்றார் பெருமாள் பிள்ளை.

"அப்பொழுது நான் இப்போது உங்களுக்கு தீண்டாதவனாக ஆகி விட்டேனா?" என்றார் கலெக்டர்.

புதுமைப்பித்தன் கதைகள்

763