உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய்க்காலிலிருந்து வருகிறதை பசி தாகம் இல்லாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவளுக்கு வீட்டிலே யாரிடத்திலும் பயம் என்பது கிடையாது; அதாவது பாட்டையாவைத் தவிர. "ஏ! வாயாடி, அங்கெ என்ன சத்தம்; ஒன்னைப் புடிச்சு அம்மன் கோவில் பூசாரிக்கு கட்டிப் போடுவேன்" என்று அதட்டுவார் அசைந்தாடும் பெருமாள் பிள்ளை. உடனே சத்தம் ஓய்ந்துவிடும்.

இப்பொழுதெல்லாம் பால்வண்ணம் பிள்ளை மாஜி சர்வாதிகாரி மாதிரி பெட்டிப் பாம்பாகக் காலம் தள்ளி வருகிறார். வாலிப மூர்த்தன்யத்தினால் மாமனார் சொல்லையும் தட்டிவிட்டு, நாலைந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து, டவுணில் பலசரக்குக் கடை வைத்து நொடித்ததின் பலன் இந்தச் சாதுத் தன்மை. இந்த விவகாரத்திலே இன்னும் ஒரு ஏமாளிப்பட்டமும் கிடைத்தது. கடை பிள்ளையவர்களின் விலாசத்தில் இருந்ததினால் கடைக்கு எதிர்சரகத்திலிருந்த போத்தி ஓட்டலில் பிள்ளையவர்களின் பெயரில் பற்றுக் கணக்கு ஏற்பாடாயிற்று. கடை நொடியும்பொழுது ஐயனுக்கு ஐநூற்றிச் சில்வானம் பற்று. அதற்கு ஈடாக கன்னடியன்கால் பாசானத்தில் கால் கோட்டை நிலம் எழுதிக் கொடுத்த கவுரவம் ஜில்லாவிலேயே பால்வண்ணம் பிள்ளையைத்தான் சார்ந்தது. ஐயர் இன்னும், "பாவன்னாவைப் போல் உண்டா; மகா நாணயஸ்தனல்லவா; அவர்கூடச் சேர்ந்த கயவாளிப் பயல்கள் கரியாக்கிப் போட்டான்" என்று சொல்லியபடி இன்றும் நிலத்தை, புத்திர களத்திர பாத்தியதையாக என்று எழுதிக்கொடுத்த பத்திரத்தின் படி ஆண்டனுபவித்து வருகிறார். பெரிய பிள்ளையவர்களோ, சந்தர்ப்பம் வாய்க்கும் போதும், சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டும், "அல்லாவுக்கு ஆசைப்பட்டுப் போய் அரைக்கோட்டை நிலத்தை எழுதிக்கொடுத்த தானாதிப் பிரபு - அப்படியும் ஒரு நாக்கு துடிக்குமோ, அந்த நாக்கை அறுத்து நாய்க்குப் போடணும்" என கர்ஜித்துக் கொண்டிருப்பார். இவர் வசமாக இவ்விதம் ஒரு பாசுபதாஸ்திரம் கிடைத்துக் கொண்டதினாலும், கடை நொடிப்பிலிருந்தே தம் செயலில் நம்பிக்கை இழந்து போனதனாலும், இயல்பாக வயது பெருகி வருமானம் பெருகாத விபரீதத்தாலும் பால்வண்ணம் பிள்ளை பெட்டிப் பாம்பாக ஒடுங்கி, யார் கூப்பிட்ட சத்தத்துக்கும் ஏன் என்று கேட்பதும், மறுநிமிஷம் குட்டு வெளிப்பட்டு விடுமென்றிருந்தாலும், நெஞ்சுரமின்மையால், அந்த நிமிஷத்தை சமாளிப்பதற்காகப் பொய் சொல்லுவதுமாக, மறுகால்மங்கலத்தில் அல்வாப் பிள்ளை என்ற பட்டத்துடன் நடமாடி வருகிறார்.

பெரிய பிள்ளையின் பெரிய மரப்பிள்ளை இப்பொழுது ராவ் சாஹேப் பட்டம் பெற்ற உதவி போலீஸ் ஜில்லா சூப்பிரண்டு. இரண்டு தடவை நிகழ்ந்த சத்தியாக்கிரக போராட்டங்கள் இவருக்கு தமது ராஜ விசுவாசத்தைக் காண்பித்து ராவ் பகதூர் பட்டம் பெற சவுகரியம் செய்து வைத்தது. முன்பின் யோசியாமலும் சட்டத்தை உதாசீனம் செய்தும் தீவட்டிக் கொள்ளையும் கொலையும்

772

அன்னை இட்ட தீ