பக்கம்:புது டயரி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடைப் புராணம்

19

 “மறுபடியும் உன் கதையை அவிழ்க்காதே. சட்டுப் புட்டென்று சொல். இதற்கு எவ்வளவு வேணும்?”

“கம்பி ஒண்னுக்கு ஒரு ரூபா ஆகும். கொடைத் துணி ஒரு ரூபா. கூலி ஒங்க மனசு போலத் தாங்க.”

எப்படியோ பேரம் பண்ணி மூன்று ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்டேன். கால் மணியில் குடையை ஒக்கப் பண்ணிவிட்டான்.

“என் அப்பா, இந்தக் கால் மணி வேலைக்கா மூன்று ரூபாய்?” என்று கேட்டேன்.

“என்ன எசமான் அப்படிச் சொல்றீங்க? எனக்குக் கூலியே இல்லிங்களே. ஜாமான் வெலையே நாலு ரூவா. அதிலே ஒரு ரூவா கொறைச்சுட்டீங்க. என் கூலியிலே மண்ணைப் போட்டீங்க!”

எனக்குக் கோபம் வந்துவிட்டது. “என்ன, பேசாத வார்த்தைகளைச் சொல்கிறாய் மண்ணப் போடுகிறதாவது! உன்னைக் கூப்பிட்டதே பிசகு” என்று சொல்லி அவனிடம் மூன்று ரூபாய் எடுத்து வீசி எறிந்துவிட்டுக் குடைகளையெல்லாம் எடுத்துக்கொண்டேன்.

“நாளைக்கு வரட்டுமுங்களா?” என்று அவன் கேட்டதற்கு நான் பதிலே சொல்லவில்லை.

விரைவில் நீராடினேன். உணவு உண்டேன். ஒக்கப் பண்ணின குடையை எடுத்துக் கொண்டேன். அப்போது ஓர் எண்ணம் உண்டாயிற்று. ஒருகால் இந்தக் குடை இடையிலே கம்பி முறிந்தால் என்ன செய்வது? நேற்றுக் கொண்டு போனதையும் பாதுகாப்பாகக் கொண்டு போகலாம் என்று அதை எடுத்தேன். அதன் துணி முன் போலவே தூக்கிக்கொண்டுதான் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/26&oldid=1149419" இலிருந்து மீள்விக்கப்பட்டது