பக்கம்:புது டயரி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

புது டயரி


புத்தகத்தை ஒய்வு நேரத்தில் பார்த்துச் சிறிய முன்னுரை எழுதிக் கொடுத்தால் போதும். அவசரம் இல்லை. ஆனால் அச்சகத்தார் நெருக்குகிறார்கள். உங்களுக்குத் தெரியாதா, அச்சு வேலை நச்சுவேலை என்று? எப்போது முடியுமோ அப்போது எழுதித் தாருங்கள். நான்கு நாள் கழித்து வரட்டுமா?” என்றார்.

அவர் என்னை ஓய்வாக இருக்கச் சொல்கிறார். ஆனால் அவருக்கு முன்னுரை மட்டும் எழுதிக் கொடுத்தால் நல்லது; அதுவும் நான்கு நாளுக்குள் எழுதிக் கொடுக்க வேண்டு மென்பதைக் குறிப்பாகச் சொல்லிவிட்டார். நான், “பார்க்கலாம்” என்று சொல்லி அனுப்பினேன்

ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை நிறுத்திக் கொண்டேன் என் மூளை படுவேகமாக வேலை செய்தது. அன்பர்கள் எத்தனை அன்பாக என் உடல் நலத்தைப்பற்றி விசாரித்தார்கள்! “நீங்கள் பல ஊர்களுக்குப் போய் அலைய வேண்டாம். உடம்பு சரியானவுடன் எங்கள் ஊருக்கு மட்டும் ஒரு முறை வந்து பேசிவிட்டுப் போங்கள். நேரே இங்கே வந்து இறங்கிப் பேசிவிட்டு இரவே போய்விடலாம். உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சிலர் கடிதம் எழுதினார்கள். அவர்களுக்குத்தான் என் உடல் நலத்தில் எவ்வளவு அக்கறை நான் பல இடங்களுக்குப் போகாமல் ஒய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்ற உபதேசத்தை எவ்வளவு அன்போடு செய்கிறார்கள்! என் சொற்பொழிவைத் தம் ஊரில் மாத்திரம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்வதில் எத்தனை உரிமையையும் ஆவலையும் அன்பையும் காட்டுகிறார்கள்!

இத்தனையும் அந்த நோயினால் வந்த பிரபாவம். இப்போது, ‘நோய்க்கு இடங் கொடு’ என்று நான் சொல்வது எவ்வளவு அநுபவ பூர்வமான மணிமொழி என்று தெரிகிறதல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/49&oldid=1149569" இலிருந்து மீள்விக்கப்பட்டது