பக்கம்:புது டயரி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

புது டயரி


ரசிகர்கள். இதை யாராவது மறுக்க முடியுமா? மூக்குப் பொடியில் ரசம் உண்டா? சுருட்டுப் புகையில் ரசம் உண்டா? புகையிலை போடுகிறவர்கள் தாமே உண்மையில் அதன் ரசத்தை, சுவையை உணர்ந்து ரசிக்கிறார்கள்? அப்படியிருக்க அவர்கள் மட்டுமே ரசிகர்கள் என்று சொல்லுவதற்கு என்ன தடை?

புகையிலையை ரசிக்கும் இயல்பு எப்படி உண்டாகிற தென்று ஆராய்ந்து பார்த்தேன். பல்வலி சிறிது உண்டாகி அதனால் அவதிப்பட்டவர்கள் புகையிலையின் பரம ரசிகர்களாக மாறிவிடுகிறார்கள். வயிற்றுவலி வந்த பிறகு அப்பர் சுவாமிகள் பெரிய சிவ பக்தராக மாறிவிட்டார். பல்வலி வந்தால் புகையிலையை வலிக்கும் இடத்தில் வைத்தால் வலி நீங்கும். புகையிலை பின் விறுவிறுப்பான காரம் எவ்வளவு சுகமாக, இதமாக இருக்கும் தெரியுமா? அதற்காகவே பல்வலி வந்தால் நல்லதுபோலத் தோன்றும். இப்படி வலிக்கு இதமாகப் புகையிலையை வைத்து அந்தச் சுகத்தை அநுபவித்தவர்கள் பிறகு, புகையிலைக் காதலர்களே ஆகிவிடுகிறார்கள். புகையிலை போடும் பல பேர்களிடம் நான் கேட்டுத் தெரிந்த கொண்ட உண்மை இது.

ஆனால் என்னிடம் மட்டும் இது பலிக்கவில்லை.இரண்டு முறை இந்த அற்புதமான மூலிகையின் அநுபவம் எனக்கு ஏற்பட்டது. மிகவும் இளைஞனாக இருந்தபோது ஒரு பெரியவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் நன்றாகப் பாடுவார்; புகையிலை போடுவார். புகையிலையின் சுவை எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆசை. சின்னப் பையனாகிய நான் அவ்வளவு பெரியவரிடம் போய்ப் புகையிலை கேட்கலாமா? அவர் தம்முடைய செல்லப் பெட்டியிலிருந்து புகையிலையை எடுக்கும்போது, சிந்தினால் அதை எடுத்துப் போட்டுக் கொள்ளலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அவரே ஒரு சிறிய துண்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/73&oldid=1150755" இலிருந்து மீள்விக்கப்பட்டது