பக்கம்:புது மெருகு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியரின் வெற்றி
1

தென்னாட்டிற்கு அகத்திய முனிவர் புறப்பட்டார்.

தாம் போகிற நாட்டிலே வாழ்வதற்கு அந்த நாட்டு மொழி தெரிய வேண்டாமா? சிவபெருமானிடத்திலே தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். போகிற இடத்தில் காடும் மலையும் அதிகமாக இருப்பதால் தமக்குத் தெரிந்தவர்கள் வேண்டும். 'குடியும் குடித்தனமு'மாக வாழ்வதற்கு வேண்டிய சௌகரியங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக அவர் ' கங்கையாரிடத்தில் காவிரியாரையும், யமதக்கினியாரிடத்தில் திருணதூமாக்கினியாரையும், புலத்தியனாரிடத்தில் உலோபமுத்திரையாரையும், துவாரகைக்குப் போய் பதினெட்டு அரசர்களையும், பதினெண் கோடி வேளிர்களையும் அருவாளரையும் பிறரையும்' பெற்றுப் புறப்பட்டார், ஜமதக்கினியின் புதல்வர் திருணதூமாக்கினி அகத்தியருக்கு மாணாக்கரானார்.

போகிற இடத்தில் தாம் போய் நிலைத்த பிறகு மனைவியை, அழைத்து வரவேண்டும் என்பது அகத்தியர் எண்ணம்போலும். புலத்தியர் கன்னிகாதானம் செய்து கொடுக்க மணந்துகொண்ட அந்த லோபா முத்திரையை அங்கேயே விட்டுவிட்டு, "பிறகு அழைத்துக்கொள்கிறேன்" என்று சொல்லி வந்து விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/6&oldid=1548509" இலிருந்து மீள்விக்கப்பட்டது