பக்கம்:புது மெருகு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியரின் வெற்றி

3

அகத்தியர் மனத்தில் உண்டாயிற்று. 'இந்தக் கட்டழகுக் காளை, விரைவில் வரவேண்டுமென்று நினைத்து அவளைத் தோளில் தூக்கிக்கொண்டு வந்தால் அவள் பிரஷ்டையாய் விடுவாளே!' என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் ஒரு குழப்பத்தை உண்டாக்கியது. தம் ஆணைக்கு அடங்கிய மாணாக்கனது தூய்மையை அவர் அறிந்தாலும் பெண்களின் சஞ்சல புத்தியை நினைந்து கலங்கினார். "அவளருகில் செல்லாமல் நாலு கோல் தூரம் இடை விட்டு அவளை அழைத்து வா" என்று கட்டளையிட்டுத் தொல்காப்பியரை அனுப்பிவிட்டுத் தம் மனைவியின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் முனிவர்.

உத்தம மாணாக்கராகிய தொல்காப்பியர் புலத்திய முனிவரிடம் சென்று தம் ஆசிரியரது கட்டளையைத் தெரிவித்து லோபாமுத்திரையை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். நாலு கோல் நீளம் இடை விட்டே அழைத்து வந்தார். காடும் மலையும் தாண்டிச் சோழ நாடும் கடந்து பாண்டி நாட்டுள்ளே புகுந்தார். பாண்டி நாட்டினிடையில் வையையைற்றில் இறங்கி அக்கரைக்கு வரும் சமயத்தில் திடீரென்று வெள்ளம் வந்துவிட்டது. தொல்காப்பியர் எப்படியோ கரையேறிவிட்டார். லோபாமுத்திரையால் ஏற முடியவில்லை. வெள்ளம் இழுத்துக்கொண்டு போயிற்று.

"ஐயோ, என்னைக் காப்பாற்று!" என்று லோபாமுத்திரை கதறினாள்.

தொல்காப்பியருக்கு அகத்தியர் இட்ட கட்டளை நினைவுக்கு வந்தது. 'இவரை நான் எப்படிக் கரையேற்றுவது! "நாலுகோல் தூரம் இடை விட்டு அழைத்து வரவேண்டும்" என்று ஆசிரியர் கட்டளை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/8&oldid=1548531" இலிருந்து மீள்விக்கப்பட்டது