பக்கம்:புது வெளிச்சம்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமூலர் பேசுகிறார். ‘முகத்துக் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகத்துக் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்', என்று ஒலிஅறிகருவி, மனமறிகருவி சுவையறிகருவிகள் போலப் பண்பறிகருவிதான் மனம். மனதும், இந்திரியங்களும் ஒருமுகப்பட்ட நிலையே தவம்’ என்று உபநிசத்து விளக்கம் செய்கிறது. இது மிகச் சரியான விளக்கம்.

பொறிவாயில் ஐந்தும் அவித்தானது பொய்தீர்ந்து (மெய்யான) ஒழுக்க நெறிதான் தவம் என்கிறது நமது தமிழ் வேதமாகிய திருக்குறள். உற்றநோய் நோன்றல், உயிர்க் குறுகண் செய்யாமை இவ்வளவுதான் தவம் எனும் சொல்லின் பொருள், என்றும் வேறு குறட்பாவில் நமக்கு விளக்குகிறார். மேலும் விவரித்துக்கொண்டு செல்கிறார். தவமும் தவம் உடையாருக்கு மட்டும் ஆகும்; மற்ற எல்லாருக்கும் ஆவதொன்றன்று, என்கிறார். ஒன்னார்த்தெறலும் உவந்தாரை யாக்கவும் தவத்தினால் முடியும் என்கிறார். வேண்டிய வேண்டியாங்கு எய்தலாம், ஏனைய மண்ணுயிரெல்லாம் தொழத்தக்கவராகவும் நம்மை இந்தத் தவம் செய்து உயிர்ப்பித்து உலகில் நிரந்தரமாக இருக்க வைக்கும், என்றெல்லாம் சொல்லுகிறார்.

ஆஆ ! இந்தத் தவம் எனும் சொல்லில் எவ்வளவு மகத்தான சக்தி அடங்கியுள்ளது. என்று இப்போது நமக்கும் கொஞ்சம் புலப்படுவது போல் தோன்றுகிறதல்லவா?

மகத்தான சக்திவாய்ந்த இந்தத் தவம் எனும் சொல் குறிக்கும் , பொருள் இன்றைய உலகிலுள்ளவர் கருதுவது போன்ற பொய்மைகள் எதையும் தன்னுள் வைத்துக்கொண்டிருக்கவில்லை. வீடுவாசலை விட்டு, மனைவிமக்களை மறந்து கானகத்திற்குச் சென்று, இலைசருகு, கந்த மூலங்களைத் தின்று, சடைகளை வளர்த்தி காசாய தாரியாக நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. நாம் என்ன செய்யவேண்டும் என்பதை வள்ளுவரே நமக்கு மற்றொரு குறளில் மழித்தலும் நீட்டலும் (போன்றன எதுவும் நீ செய்ய வேண்டாம்; உலகம் (சான்றோர்) பழித்த தனைத்தையும் ஒழித்துவிட்டால் அது போதும், என்கிறார்.

28 <

கவிஞர் வெள்ளியங்காட்டான்