பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 / புத்தரின் வரலாறு

கௌசாம்பியிலிருந்த புத்த சங்கத்தார், நகர மக்களால் அவமதிக்கப்பட்டார்கள். இவர்கள் சச்சரவு செய்துகொண்டு பிணங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட மக்கள் இவர்களை இகழ்ந்தார்கள். இதனை அறிந்த பிக்கு சங்கத்தார், பகவன் புத்தரை நாடிச் சிராவத்தி நகரத்துக்கு வந்தார்கள். வந்து தமது குறையை அவரிடம் சொன்னார்கள். பகவர், அவர்களுக்குப் புத்திமதிகளைக் கூறி, இரு சார்பாரையும் ஒன்றுபடுத்தினார்.

பயிர் செய்யும் குடியானவன்

பதினோராவது மழை காலத்துக்குப் பிறகு ததாகதர் இராசகிருக நகரம் சென்றார். அவர் தக்கிணாகிரி வழியாக ஏகநாளம் என்னும் கிராமத்தின் ஊடே சென்றபோது, பாரத்வாஜன் என்னும் பார்ப்பனன் தன்னுடைய வயல்களில் இருந்து பயிர்த் தொழிலைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன், ததாகதரைப் பார்த்து, "சிரமணரே! நான் நிலத்தை உழுது பண்படுத்துகிறேன். நீர் பாய்ச்சிக் களை பிடுங்குகிறேன். இவ்வாறு பயிர் செய்து உயிர் வாழ்கிறேன். தாங்களும் ஏன் பயிர் செய்து உண்டு வாழக்கூடாது?" என்று வினவினான்

இதனைக் கேட்ட பகவர், “நானும் உழுது விதைத்துப் பயிர் செய்து உண்டு வாழ்கிறேன்" என்று கூறினார்.

இதைக்கேட்ட வியப்படைந்த பார்ப்பனன், "வணக்கத்திற்குரிய கௌதமரே! உம்மிடம் ஏர், எருதுகள் முதலியவை இல்லையே! தாங்கள் எப்படிப் பயிர் செய்கிறீர்கள்?" என்று கேட்டான். "உண்மைத் தத்துவம் என்பது விதைகள். ஆர்வம் என்பது மழைநீர். அடக்கம் என்பது கலப்பை. ஊக்கமும் முயற்சியும் எருதுகள். துக்கமற்ற இன்பநிலையே அறுவடை" என்று கூறினார் பகவர்.

இதைக் கேட்ட பாரத்துவாஜன் மனம்மகிழ்ந்து பௌத்த தர்மத்தை மேற்கொண்டு வாழ்ந்தான்.

சுப்ரபுத்தன் நரகம் அடைந்தது

ததாகதர் போதிஞானம் அடைந்து பதின்மூன்றாம் ஆண்டில் பகவன் புத்தர்ஜேதவனத்தில் தங்கியிருந்தபோது, இராகுல தேரருக்கு இருபது வயது நிரம்பிற்று. அதனால்,அவருக்கு உபசம்பதா துறவு கொடுக்கப்பட்டது. அதேஆண்டு பகவர்கபிலவத்து நகரம் சென்றார்.