பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 / புத்தரின் வரலாறு

சுற்றி மும்முறை வலம் வந்து அடிபணிந்து வணங்கினார். பிறகு தீ வைக்கப்பட்டதும் நெருப்பு எரியத் தொடங்கியது.

தீ பற்றி பகவன் புத்தருடைய திருமேனி எரிந்து எலும்பு மட்டும் எஞ்சியது. அப்போது வானத்திலிருந்து மழை பெய்து தீயைத் தணித்தது.

சேதியம் கட்டியது

பகவன் புத்தர் பரி நிர்வாணம் அடைந்தார் என்பதைக் கேள்விப்பட்ட அஜாதசத்துரு அரசன், தூதுவரை அனுப்பித் தனக்குப் புத்தருடைய தாது சிலவற்றை அனுப்பும்படிக் கேட்டான். அவ்வாறே வைசாலிநாட்டு லிச்சாவியரும், கபிலவத்துச் சாக்கியரும், அல்லகப்பை பூலிகரும், இராம கிராமத்துப் கோலியரும், பாவாபுரி மள்ளர்களும், வேட்ட தீபத்துப் பிராமணர்களும் தங்களுக்குப் புத்த தாது வேண்டும் என்றும் அந்தத் தாதுவின்மேல் சேதியங்களை அமைக்கப் போவதாகவும் கூறினார்கள்.

ஆனால், குசி நகரத்து மள்ளர்கள், புத்த தாதுவை ஒருவருக்கும் கொடுக்கமாட்டோம் என்று பிடிவாதம் செய்தார்கள். அப்போது, அங்கிருந்த துரோணன் என்னும் பார்ப்பனன், அவர்களை அமைதிப்படுத்தி, புத்த தாதுவைப்பல இடங்களுக்கு அனுப்பினால், அத்தாதுக்களின்மேல் சேதியங்களை அமைத்துக் கொண்டாடு வார்கள். அதனால் பகவன் புத்தருடைய புகழும் பெருமையும் உலகமெங்கும் பரவும் என்று கூறினான். பிறகு அவர்கள் தாதுவைப் பங்கிட்டுக்கொள்ள இசைந்தார்கள். அவர்கள் துரோணனையே தாதுவைப்பங்கிடும்படிக் கூறினார்கள். அவனும் தாதுவை எட்டுச் சமபங்காகப் பங்கிட்டுக் கொடுத்தான். தாதுவைப் பங்கிட்ட தட்டத்தைத் தான் எடுத்துக்கொண்டு அத்தட்டத்தின் மேல் சேதியம் கட்டினான். தாதுவைக் கொண்டுபோன எல்லோரும் அதைப் புதைத்த இடத்தில் சேதியங்களைக் கட்டினார்கள்.

புத்த தாது பங்கிடப்பட்ட பிறகு பிப்பலிவனத்தைச்சேர்ந்த மௌரியர்கள், தங்களுக்கும் புத்த தாது வேண்டுமென்று கேட்டார்கள்.முன்னமே பங்கிடப்பட்டபடியினாலே, அவர்களுக்குக் தாது கிடைக்கவில்லை. அவர்கள், திருமேனியை எரித்து எஞ்சியிருந்த கரிகளைக் கொண்டுபோய் அதன் மீதி சேதியங் கட்டினார்கள். இவ்வாறு பகவன்புத்தருடைய தாதுக்களின் மேலே பத்துச் சேதியங்கள் கட்டப்பட்டன.