பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 / புத்தரின் வரலாறு

புத்தர் திருவாக்குகள் திரிபிடகமாகத் தொகுக்கப்பட்ட பிறகும், அவை எழுதப்படாமல் எழுதாமறையாகவே இருந்தன. அவற்றைப் புத்தருடைய சீடபரம்பரையினார் வாய்மொழியாகவே ஓதிப் போற்றி வந்தனர். அவர்கள் வெவ்வேறு பிரிவாகப் பிரிந்து, பிடகங்களின் வெவ்வேறு பகுதிகளைக் குரு சிஷ்ய பரம்பரையாக ஓதிவந்தார்கள்.

விநய பிடகத்தை ஓதிய தேரர்கள் விநயதரர் என்றும் சூத்திரபிடகத்தை ஓதிய தேரர்கள் சூத்ராந்திகர் என்றும் அபிதம்ம பிடகத்தை ஓதிய தேரர்கள் அபிதம்மிகர் என்றும் பெயர் வழங்கப்பட்டனர், இப்பெரும் பிரிவுகளில் உட்பிரிவுகளும் உண்டு. அவர்களுக்கு அந்தப் பிரிவுகளின் பெயர் வழங்கப் பட்டன. உதாரணம், தீக பாணகர், மஜ்ஜிம பாணகர், சம்யுக்த பாணகர், அங்குத் தர பாணகர், ஜாதக பாணகர், தம்மபதப் பாணகர் முதலியன.

பிற்காலத்தில பௌத்த மதத்திலே சில பிரிவுகள் ஏற்பட்டன. இப்பிரிவுகளைப் பழைய பிரிவினர், புதிய பிரிவினர் என்று இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். பழைய பிரிவுக்குத் தேரவாத பௌத்தம் என்பது பெயர். (இதனை ஹீனமான பௌத்தம் என்று தவறாகப் பெயர் கூறப்படுகிறது.) புதிய பிரிவுக்கு மகாயான பெளத்தம் என்பது பெயர்.

இலங்கைத் தீவிலே பழைய தேரவாத பௌத்த மதம் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்தது. காலப்போக்கிலே இலங்கையிலேயே புதிய பௌத்தக் கொள்கைகள் பரவத் தொடங்கின. அப்போது, பழைய தேரவாத மதத்தில் புதிய கொள்கைகள் புகாதபடிச்செய்ய, திரிபிடகங்களை எழுத்தில் எழுதிவைக்கத் தொடங்கினார்கள். இலங்கைத் தீவை கி.மு. முதல் நூற்றாண்டிலே (கி.மு.88 முதல் 76 வரையில்) அரசாண்ட வட்டகாமினி என்னும் அரசன் காலத்தில், மலைய நாட்டிலே மாத்தளை என்னும் ஊரில் உள்ள அலு (ஆலோக) விகாரை என்னும் பௌத்தப்பள்ளியிலே, முன்பு வாய்மொழியாக ஓதப்பட்டுவந்த திரிபிடகம், நூல் வடிவமாக ஏட்டில் எழுதப்பட்டது.

திரிபிடக நூல்கள் பாலிமொழியில் எழுதப்பட்டுள்ளன. தேரவாத பௌத்த நூல்கள், உரைநூல்கள் உட்படயாவும் பாலி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. (மகாயான பௌத்த நூல்கள் வடமொழியிலே எழுதப்பட்டுள்ளன.) பிடக நூல்களும் அவற்றின் பிரிவுகளும் வருமாறு: